குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் யாழ். காவல்துறையினரால் மீட்கப்பட்டு உள்ளன.யாழ்.போதனா வைத்திய சாலைக்கு வீதியில் அமைந்தள்ள வீடொன்றில் இருந்தே இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டு உள்ளன.
குறித்தே வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரொருவர் வீட்டினை அடாத்தாக பிடித்து அங்கு வசித்து வந்துள்ளார். அது குறித்து வீட்டின் உரிமையாளர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , வீட்டில் அடாத்தாக குடியேறி உள்ளவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு நீதிமன்று கட்டளையிட்டு இருந்தது.
நீதிமன்ற கட்டளையை மீறி தொடர்ந்து குறித்த நபர் வீட்டில் அடாத்தாக தங்கியிருந்தமையால் , நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இன்றைய தினம் காலை யாழ்.போலீசார் குறித்த வீட்டுக்கு சென்று வீட்டில் அடாத்தாக குடியேறி இருந்தவரை வெளியேற்றி வீட்டில் இருந்த பொருட்களையும் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அதன் போது குறித்த வீட்டில் இருந்த அலுமாரி ஒன்றில் பெருமளவான ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளன.
அதனுள் இருந்து ஏகே – 47 ரக துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் ரவைகள் 2396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2, கோஷர் ஒன்று மற்றும் 2 வாள்கள் என்பன மீட்கப்பட்டன.
அதனையடுத்து வீட்டில் அடாத்தாக குடியேறியிருந்த புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.