Home இலங்கை வட மாகாண முதலமைச்சருக்கும் மலேசிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

வட மாகாண முதலமைச்சருக்கும் மலேசிய பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கைக்கு பயணம் செய்துள்ள மலேசிய பிரதமர் தத்தோ நஜீப் ரசாக்கை, வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் சந்தித்துள்ளார். இன்றைய தினம் கொழும்பில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. மலேசிய பிரதமருடன் சந்திப்பு நடத்த அனுமதிக்குமாறு விக்னேஸ்வரன் கோரியிருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக மலேசிய பிரதமர் தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் சுளித்த முகத்தையும் மீறி மலேஷிய பிரதம மந்திரியுடனான வடமாகாண முதலமைச்சரின் சந்திப்பு சுமுகமாக ‘ஷங்க்ரி – லா’ ஹொட்டேலில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்றது.

சுமார் 45 நிமிட நேரம் இருவரின் சந்திப்பும் நிகழ்ந்தது. பிரமருடன் வந்திருந்த அமைச்சர்கள் வைத்திய கலாநிதி சுப்ரமணியம், டாடோ சாமிவேலு, தனிப்பட்ட அவரின் வைத்தியர் வைத்தியகலாநிதி ஜெயந்திரன் சின்னத்துரை உட்பட அவரின் அலுவலர் குழாமும் முதலமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரசன்னமாய் இருந்தனர்.


இருதரப்பாரும் வட இலங்கை மக்களுக்கும் மலேஷியா நாட்டுக்கும் இடையில் பாரம்பரியமாக இருந்து வந்துள்ள உறவை வலியுறுத்தினர். இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் மலேஷியாவில் ஒருமித்து தமிழர்கள் என்றே அழைக்கப்பட்டாலும் இருதரப்பாரின் முன்னோர்களும் வித்தியாசமான பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்திய தமிழ் மக்கள் தொழிலாளர்களாக வேலை பார்க்க வந்தார்கள் என்றும் யாழ்ப்பாணத் தமிழர் இலிகிதர் வேலை பார்க்கவே வந்தார்கள் என்றும் கூடிய கல்வித் தகைமைகளைக் கொண்டிருந்த அவர்களின் மூன்றாந் தலைமுறையினரே இன்று தம் நாட்டில் மிக உயர்ந்த பதவிகளை வகிக்கின்றார்கள் என்றும் பிரதமர் கூறினார். அதற்கு முதல்வர் தமது பாட்டனார் கூட கோலாலம்பூரில் சட்டத்தரணியாக நூறு வருடங்களுக்கு முன்னர் வேலை பார்த்ததாகக் கூறினார். படிப்பில் யாழ்ப்பாண மக்கள் மிக ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் அதனால்த் தான் சுதந்திரம் கிடைத்த காலத்தில் இலங்கையில் சகல தொழிற் துறைகளிலும் பெருவாரியான தமிழர்களே இடம் பிடித்திருந்ததாகவும் அதைப் பொறுக்காத பெரும்பான்மை இன மக்கள் அப்பொழுதிருந்தே தமிழர்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வந்து பாரபட்சம் காட்டி இன்று கைவிட்டு எண்ணக் கூடியவர்களே அரச சேவையில் கடமையாற்றுவதாகவுங் கூறினார். முஸ்லீம்களுக்கும் இந்தக் கதியே ஏற்பட்டதென்றும் ஆனால் முதல்வரின் நண்பர் அஷ்ரவ் அவர்கள் அமைச்சராக இருந்த போது கொழும்பு துறைமுக திணைக்களத்திற்குப் பெருவாரியான முஸ்லீம்களை நியமித்ததாகவும் அவரிடம் கேட்ட போது முஸ்லீம்களுக்குக் குறிப்பிட்ட கோட்டா கொடுப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும் அவ்வாறு பல வருடங்கள் கோட்டாப்படி நியமிக்காததால் சகல வருட கோட்டாக்களையும் சேர்த்து முஸ்லீம்களை நியமித்ததாகவும் கூறினார் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

அன்று இங்கிருந்து சென்ற தமிழர்கள் நவீன மலேஷியாவை உருவாக்க முன்னின்றிருந்தார்கள் எனில் இன்று அங்கிருந்து அதே புலம்பெயர்ந்தோரின் வாரிசுகள் எம் நிலையை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் இன்றைய வடமாகாண நிலையைப் பிரதமருக்கு எடுத்தியம்பினார் முதல்வர். தொடர்ந்து இராணுவத்தினர் சுமார் 62000 ஏக்கர்கள் நிலத்தில் குடியிருந்து வருவதாகவும் வணிகம், மீன்பிடி, விவசாயம், சுற்றுலா போன்ற இன்னோரன்ன துறைகளில் படையினரின் கையே ஓங்கி இருப்பதாகவுஞ் சுட்டிக் காட்டினார். சுமார் ஐயாயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே இது வரையில் விடுபட்டுள்ளதாகவும் கூறினார். போரினால் பாதிக்கப்பட்ட 49000 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் சுமார் 11000 முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் படையினரின் அண்மை பல பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளதென்று கூறினார். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு சுழலும் நிதியத்தை ஏற்படுத்தினால் நல்லது என்று முதல்வர் கூறினார். அதற்கு பிரதமர் அவ்வாறான சுழலும் நிதியம் தம் நாட்டில் ஏற்படுத்தப்பட்டு வசதி குறைந்தவர்களுக்கு அது நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தது என்றார். பெண்கள் பொதுவாகக் கடன் அனைத்தையும் அடைப்பார்கள் என்று முதல்வர் கூறிய போது தம் நாட்டில் 97 சதவிகிதப் பெண்கள் கடன்களைத் திரும்ப அடைத்தார்கள் என்றும் கூறினார்.


பொருளாதார ரீதியாக உங்களின் வருமானங்கள் என்ன என்ற கேள்விக்கு, எம்மிடம் இருந்து பெறும் வருமானத்தை அரசாங்கம் பொறுப்பேற்று அதில் சுமார் 10ல் ஒரு பங்கையே எமது முதலீட்டு செலவினங்களுக்கு அது தருகின்றது என்று முதல்வர் கூறினார். மிகுதியில் பெரும் பகுதியை அரசாங்கம் தமது அமைச்சர்கள் ஊடாகவும் அமைச்சுக்கள் ஊடாகவும் தாம் நினைத்தவாறு வடமாகாணத்தில் செயல்திட்டங்களை அமுல்படுத்த பிரயத்தனங்கள் எடுக்கின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டி எமது தேவைகளை அறிய முற்படாது தமது தேவைகளுக்கு ஏற்ப காய் நகர்த்துகின்றார்கள் என்று குறைபட்டுக் கொண்டார். அண்மையில் 600 ஏக்கர் காணியில் திறந்த மிருகக்காட்சி பூங்காவை அமைக்க மத்தியின் அமைச்சர் ஒருவர் நடவடிக்கை எடுத்ததை எடுத்துரைத்தார்.

பிரதமர் இது பற்றிக் கூறுகையில் ஐம்பதாயிரம் வரையில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் 11000 வரையில் முன்னாள் போராளிகளும் ஊனமுற்றவர்களும் பல வித தேவையுடன் இருக்கும் போது மிருகக் காட்சிப் பூங்கா அமைக்க விரும்புவது விசித்திரமாக இருக்கின்றது என்றார்.

தொடர்ந்து எவ்வாறான முதலீடுகள் நன்மை பயக்கும் என்று பிரதமர் கேட்டதற்கு விவசாயம், மீன்பிடி, கல்வி, விளையாட்டு, சுகாதாரம், மகளிர் விவகாரங்கள், சுற்றுலா, வீடமைப்பு போன்ற பலவற்றிலும் செய்யக் கூடிய முதலீடுகள் பற்றி எடுத்துக் கூறினார்.

வீடமைப்புப் பற்றி குறிப்பிடுகையில் வட மாகாணத்தில் 139000 வீடுகள் தேவையாயிருந்ததென்றும் 50000 வீடுகளை ஏற்கனவே இந்தியா தந்துதவியுள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றாலும் வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதென்றும் அரசாங்கத்தாலும் கட்டப்பட்டு வருகின்றது என்றும் எப்படியும் 50000க்கு மேல் தேவையிருப்பதை முதல்வர சுட்டிக் காட்டினார்.
ஒரு தகவல் சேகரிக்கும் குழுவை மலேஷியாவில் இருந்து வடமாகாணத்திற்கு உங்கள் மத்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அனுப்புவதாகவும் எந்தெந்தத் துறையில் உதவிகள் புரிய முடியும், முதலீடுகள் செய்ய முடியும் என்பதை அவர்கள் ஆராய்ந்து தமக்குச் சொன்ன பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். குழுவில் எமது புலம்பெயர் தமிழ் மக்களின் மூன்றாந் தலைமுறை மக்களும் அடங்குவார்கள் என்றும் கூறினார்.

பல விடயங்களைப் பற்றி கருத்துப் பரிமாற்றம் நடைபெற்ற பின் முதல்வர் பிரதமருக்கு வெகுமதிப் பொருள் ஒன்றை வழங்கிய பின் சந்திப்பு இனிதே முடிந்தது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More