குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மழைவிட்டும் துவானம் விடவில்லை என்பது போல கிளிநொச்சி வட்டக்கச்சி புதுக்காடு மாவடியம்மன் குடியிருப்பு மக்களின் நிலைமையும் காணப்படுகிறது. யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் மக்களை பீடித்துள்ள வறுமை இன்னும் நீங்கியதாக இல்லை.
யுத்தம் முடிவுற்ற பின்னர் வவுனியா செட்டிக்குளம் நலன்புரி முகாமில் இருந்து வட்டக்கச்சி புதுக்காடு மாவடியம்மன் குடியிருப்பில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இதுவரை வீட்டுத்திட்டம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. கோழிக் கூடுகளிலும், தற்காலிக கொட்டில்களிலும், என அவல வாழ்க்கை தொடர்கிறது.
இந்தக் குடியிருப்பு மக்களை பொறுத்தவரை வீட்டுத்திட்டம், வீதிகள், மின்சாரம், மலசலகூடம் என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இதுவரை ஏற்படுத்திக் கொடுக்காத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு பள்ளி மாணவி தனது கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் அ. மோகனா தனக்கு கல்வி பொதுசாதாரனதரத்தில் பயோ படிக்கக்கூடிய நல்ல பெறுபேருகள் இருந்தாலும் என்னால் கல்விகற்க முடியாத சூழல் உள்ளது.
எனது கிராமத்தில் நான் கல்வி கற்ககூடிய சூழல்கள் இல்லை ஏன் என்று சொன்னால் வீடு இல்லை நாங்கள் ஒரு கோழிகூட்டில் தான் வாழ்ந்து வருகிறோம் இவ்வாறு இருக்கும் போது எனது கல்வியை எவ்வாறு தொடர முடியும் இரவு நேரங்களில் குப்பி விளக்கில் படிக்கமுடியாது, மழை வந்தால்; வீடு ஒழுக்கு வந்து விளக்கையும் அனைத்து விடும் இதுதான் என் கல்விக்கு ஒரு தடையாக இருந்து வருகிறது இப்படித்தான் எனது கிராமத்தில் இருப்பர்களும் என்னைபோன்று வாழ்கிறார்கள்.
கிளிநொச்சி வட்டக்கச்சி புதுக்காடு மாவடியம்மன் கிராமத்துக்கு எந்த ஒரு அபிவிருத்தியும் கிடைக்க வில்லை என்று மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். இந்தப் பிரதேசங்களில் மீள்குடியேறிய போது வனவளத் திணைக்களம் இது தங்களுடைய ஆளுகையில் உள்ள பிரதேசம் என்று நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது. பின்னர் தீர்ப்பு எங்களுக்கு சார்பாக வழங்ப்பட்டது.
இதன் பின்னர் இந்த இடத்தில் எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தரவில்லை, மாவட்டத்தின் அதிகாரிகளுக்கும் அரசியல் தரப்பினர்களுக்கும் கிளிநொச்சியில் இப்படியொரு பிரதேசம் இருப்பது தெரியுமோ தெரியாது எனக் குறிப்பிடும் பொது மக்கள்
இந்தக் கிராமத்தில் உள்ள மாணவா்கள் கல்வி கற்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முக்கியமாக மின்சாரம் இன்மையால் குப்பி விளக்கில் படிக்க வேண்டும். சில குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழி வளர்ப்பதற்கு உதவி வழங்கப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட அந்தக் கூட்டில்தான் அந்தக் குடும்பங்கள் வாழ்கின்றனர். அவா்களின் கொட்டில்களை விட புதிதாக வழங்கப்பட்ட கோழிக் கூடு வசதியாக காணப்படுகிறது. எனக் கவலையுடன் தெரிவிக்கின்றனர் புதுக்காடு கிராம மக்கள்.
இவா்களின் கோரிக்கைகள் எல்லாம் மாவட்டத்தின் ஏனைய கிராம மக்கள் போன்று நாங்களும் வாழ வேண்டும், எங்களது பிள்ளைகளும் மின்சார ஓளியில் கல்வி கற்க வேண்டும். எங்களுக்கும் வீட்டுத்திட்டம் வேண்டும், எங்களது வீதிகளும் குறைந்த பட்சம் கிரவல் மூலமாகவேனும் சீரமைக்கப்பட வேண்டும், என அடிப்படை வசதிகளை கோருகின்றனனர்.