மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துமவனையில் சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோவை வெற்றிவேல் இன்று வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக முதலில் தெரிவித்த மருத்துவமனை நிர்வாகம், பின்னர் உடல்நிலை மோசமானதாக தெரிவித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டிசம்பர் 5ம் திகதி இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பியநிலையில் குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த ஆதாரம் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்தநிலையில் தங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வந்தநிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது
தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு அருந்துவது போல் உள்ளதுடன் அவர் உடல் உறுப்புக்கள் அசைவற்று காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை இதுவரை வெளியிடாமல் இருந்தோம். அவரது உடல்நிலை இருந்த நிலையில் இதை வெளியிட வேண்டாம் என்று அமைதி காத்தோம். இப்போது வேறு வழியில்லாமல் கனத்த இதயத்துடன் இதனை வெளியிட்டுள்ளோம் என இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் பல ஆதாரங்கள் உள்ளன எனவும் தேவைப்பட்டால் அவற்றை வெளியிடுவோம் எனவும் இந்த வீடியோவை விசாரணை ஆணையம் கேட்டால் கொடுப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்