குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில். வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட் அமைப்பும் எந்த விதமான தொடர்பும் இல்லை என புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்.வைத்திய சாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்ட. குறித்த வீடு முன்னர் புளொட் அமைப்பின் அலுவலகமாக இருந்ததாகவும், வீட்டில் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டவர் புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் எனவும் கூறப்பட்டது.
அது தொடர்பில் புளொட் அமைப்பின் தலைவரிடம் கேட்ட போதே , அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யுத்தம் நடைபெற்ற கால பகுதியிலையே குறித்த வீட்டினை புளொட் அமைப்பின் அலுவலகமாக பயன்படுத்தி இருந்தோம். யுத்தம் நிறைவடைந்தவுடன் ஆயுதங்களை மீள கையளிக்குமாறு உறுப்பினர்களிடம் கூறியிருந்தேன்.
அதன் அடிப்படையில் ஆயுதங்கள் அனைத்தும் மீள கையளிக்கப்பட்டது. அத்துடன் குறித்த வீட்டில் இருந்தும் புளொட் அமைப்பினர் வெளியேறி இருந்தனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறித்த வீட்டை புளொட் அமைப்பின் அலுவலகமாக பயன்படுத்தவில்லை.
ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர் 2012ஆம் ஆண்டு புளொட் அமைப்பில் இருந்து விலகி கொண்டார். அதன் பின்னர் புளொட் அமைப்புக்கும் குறித்த நபருக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.