சல்மான்கானில் நடிப்பில் வெளியாகவுள்ள ரைகர் ஜிந்தா ஹை என்னும் திரைப்படம் வெளியிடப்படுவதற்கு இரு நாட்கள் உள்ளநிலையில் சர்ச்சையில் சிக்கி உள்ளது. அலி அப்பாஸ் சஃபார் இயக்கியுள்ள இப்படத்தில் சல்மானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப் நடித்துள்ளார்.
குறித்தபடம் 22ம்திகதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு திரையரங்குகளிலும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் அதேதிகதியில் இரண்டு மராட்டியப் படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தன. எனினும் மெகா பட்ஜெட் படமான ரைகர் ஜிந்தா ஹைவெளியீட்டினால் அவற்றுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் மகாராஷ்டிர நவநிர்மாண் சித்ராபட் சேனா அமைப்பு திரையரங்க உரிமையாளர்களை எச்சரித்துள்ளது. ‘மராட்டிய படங்களான தேவா மற்றும் கச்சி ஆகியன முக்கிய நேரத்தில் ஒளிபரப்பாக வேண்டும் எனவும் மற்ற படங்களும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளபோது ஏன் ஒருபடத்துக்கு மட்டும் அனைத்துத் திரையரங்குகளும் ஒதுக்கப்பட வேண்டும் என அவ்வமைப்பின் உரிமையாளர் அமே கோப்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தாங்கள் ரைகர் ஜிந்தா ஹை உட்பட எந்தப் படத்துக்கும் எதிரானவர்கள் இல்லை எனத் தெரிவித்த அவர் திரையரங்குகள் அனைத்தும் குறிப்பிட்ட ஒரு படத்துக்கு ஏகபோக உரிமை எடுத்துக் கொள்வதை அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சுமுகமாகத் தீர்க்கப்படாத பட்சத்தில், அவர்களின் படப்பிடிப்புகளை நிறுத்த வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பெரிய பட நிறுவனங்கள் முன்னதாகவே அனைத்து சினிமா திரையரங்குகளையும் முன்பதிவு செய்துவிடுவதனால் மராத்தி பட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தங்கள் சொந்த மாநிலத்திலேயே திரையரங்குகளுக்காகப் பிச்சையெடுக்க வேண்டியிருக்கிறதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.