குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டு உயிர் இழக்க நேரிட்டால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் இந்திய மத்திய அரசு புதிய சட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
குடிபோதையில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனைத் தொடர்ந்து இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னர் குடித்துவிட்டு வாகனம் செலுத்தி உயிர் இழப்பு ஏற்பட்டால் 2 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராத தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் குடிபோதையில் அடிக்கடி விபத்தை ஏற்படுத்தும் வாகன சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றுக்கு ஏற்கனவே இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது.
இதனையடுத்து இந்திய மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தை மாற்றி அமைத்து அதில் திருத்தம் செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதன் அடிப்படையில் மேற்படி புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற வழிகாட்டுதல் குழு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான 15 அம்சங்கள் உள்ளடக்கிய அறிக்கையை நேற்றையதினம் டெல்லி மேல் சபையில சமர்பிக்கப்பட்டிருந்தது.
3-வது நபருக்கான காப்பீடு தொகையை ஒழுங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகனங்கள் பதிவு செய்யப்படும் போது 3-வது நபருக்கான வாழ்நாள் காப்பீட்டு தொகை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் பல வரையறைகளும் அதில் இடம் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.