தமிழகம் ஊழலில் முதலிடம் வகிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கவலை தெரிவித்துள்ளார். மறைமலை நகரில் நிம்ரோட் என்ற ஒப்பந்ததாரர் அமைத்த வீதி தரமாக இல்லை எனத் தெரிவித்து அவரிடமிருந்து இழப்பை வசூலிப்பதற்கு மறைமலைநகர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தமையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், நிம்ரோட் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இடம்பெற்ற நிலையில் பல அதிகாரிகளுக்கு தரகுப்பணம் கொடுத்தது போக எஞ்சிய தொகையில் வீதி அமைக்கப்பட்டதாகவும், தன்னிடம் இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் கேட்கவில்லை எனவும் மனுதாரர் விளக்கமளித்தார்.
அதையேற்க மறுத்த நீதிபதி, அதிகாரிகளுக்கு தரகுப்பணம் கொடுத்தேன் என்பது லஞ்சம்தானே எனவும் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடக்காது என்பது துரதிஷ்டவசமானது எனவும் தெரிவித்து தள்ளுபடி செய்துள்ளார்.
மேலும், அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ள கருத்தை மேற்கோள் காட்டிய நீதிபதி, இது நீடித்தால் தமிழகம் ஊழலில் முதலிடம் பிடிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.