ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் வைத்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், வழக்கு நடைபெற்று வருவதால் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து கடந்த மே மாதம் 18-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையில், குல்பூஷன் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் அவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக எடுத்த தொடர் முயற்சிக்கு பாகிஸ்தான் அரசு இறுதியாக ஒப்புதல் அளித்தது. மனிதாபிமான அடிப்படையில் இதை அனுமதிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்தது. அவர்கள் இருவரும் பாகிஸ்தான் செல்வதற்கு கடந்த 20-ந்தேதி விசா வழங்கப்பட்டது.
இதைனையடுத்து, இஸ்லாமாபாத் நகரில் இருக்கும் சிறைச்சாலையில் ஜாதவின் மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி ஆகியோர் குல்பூஷன் ஜாதவை இன்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக இவர்கள் இருவரும் இன்று இஸ்லாமாபாத் நகரை சென்றடைந்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கிய முஹம்மது அலி ஜின்னாவின் பிறந்தநாளையொட்டி நல்லெண்ண நோக்கத்தில் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுமார் அரை மணி நேர காத்திருப்புக்கு பின்னர் சுமார் 1.30 மணியளவில் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் குல்பூஷன் ஜாதவை சந்தித்து பேசியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சந்திப்பு சுமார் அரைமணி நேரம் நடைபெற்றதாகவும், அங்கிருந்து இந்திய தூதரக அலுவலகத்துக்கு செல்லும் ஜாதவின் மனைவி மற்றும் தாயார் இஸ்லாமாபாத்தில் இருந்து ஓமான் விமான சேவை விமானத்தின் மூலம் இன்றிரவு டெல்லி சென்றடைவார்கள் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயும், மனைவியும் குல்பூஷண் ஜாதவை சந்திக்கின்றனர்….
பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை அவரது தாயும் மனைவியும் இன்று சந்திக்கின்றனர். இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான 47 வயதான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும் சதி திட்டங்கள் தீட்டியதாகவும் குற்றம் சாட்டி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் கடந்த ஏப்ரலில் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்ததனை அடுத்து அவரது மரணதண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. இந்திய தூதரகம் சார்பில் ஜாதவுக்கு சட்ட உதவி வழங்கவும் குடும்பத்தினர் அவரை சந்திக்கவும் பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்து வந்தநிலையில் சர்வதேச அழுத்தம் காரணமாக அவரது மனைவி மற்றும் தாயாரை சந்தித்துப் பேச பாகிஸ்தான் ஒப்புக் கொண்டிருந்தது.
இந்தவகையில் ஜாதவின் தாயாரும் மனைவியும் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் சென்று குல்பூஷண் ஜாதவை சந்தித்துப் பேசுகின்றனர். அவர்களுடன் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் ஜே.பி.சிங்கும் செல்கிறார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் ஜாதவை சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் முகமது பாசில் தெரிவித்துள்ளார்.