இராமலிங்கம் சந்திரசேகர்
எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் பல கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. இத்தேர்தலில் தென்னிலங்கையில் வழமையாக வாக்கு வேட்டையில் முன்னணி வகிக்கும் ஐக்கியதேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவும் வடக்குக் கிழக்கில் அவ் வேட்டையில் முன்னணி வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அதன் பங்காளிக் குழுக்களும் பலத்த குத்துவெட்டுக்களுடன் தமிழ் மக்களையும் குழப்பத்துக்குள்ளாக்கித் தமிழ் மக்களிடம் வாக்குச் சேகரிப்பதற்கு வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன.
மேலும், மலையகத்தில் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், மனோ கணேசனின் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணியும், சாந்தினி சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியும் போட்டியில் களமிறங்கியுள்ளன.அத்தோடு, ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசும், ரிசாத் தலைமையிலான ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தமது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளன.
இவற்றைவிடத் திஸ்ஸ விதாரன தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சியும், ராஜா கொல்லுரே தலைமையிலான இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சியும், வாசுதேவ தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியும், வேறும் சில இடதுசாரிக் குழுக்களும் களமிறக்ககப்பட்டுள்ளன.தேசிய சிறுபான்மையின நெருக்கடி முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளதோடு முழுத் தீவும் அந்நிய நாடுகளின் கொள்ளைக்காரர்களுக்குச், சுரண்டலாளர்களுக்கு விலைபோய்க்கொண்டிருப்பதோடு, விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியனவும் அதிகரித்திருப்பதோடு நாடு பெரும் கடனாளியாகி அதல பாதாளத்தை நோக்கி மிக விரைவாகப் போய்க்கொண்டிருக்கும்போது இத்தேசத்திலேயே இடதுசாரிக் கட்சி எனப் பெருமிதத்துடன் கூறப்படக்கூடிய மக்கள் விடுதலை முன்னணியும் படித்த, பண்பட்ட, அரசியல் தெளிவுள்ள வேட்பாளர்களை இத் தேர்தலில் களமிறக்கியுள்ளது.
இத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியினரைத் தமிழ்த் துரோகிகளென வசைபாடி அவர்களுக்குத் தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுத்து நிறுத்தும் கயமைத்தனங்களில் தேசத்தின் இன, மத, பிரதேசக் குறியீட்டுக் கட்சிகளும், ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய பேரினவாதக் கட்சிகளும் துரித கதியில் ஈடுபட்டிருப்பதோடு அவை சார்ந்த ஊடகங்களும் மக்கள் விடுதலை முன்னணியினரைத் தமிழ் மக்களின் துரோககளெனப் பிரச்சாரப்படுத்த ஆரம்பித்துள்ளன.
எனவே இவ்வாறான ஒரு துரதிஸ்டவசமான சூழ்நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் தமிழ் துரோகிகள் அல்லர், மாறாகத் தமிழ் மக்களைக் காலம் காலமாக அடக்கி, ஒடுக்கி அவலப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இக்கட்சிகளின் ஆட்சிமன்ற அமைச்சரவைகளிலே பங்;குபற்றிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக் மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களே சாட்சாத் தமிழ்த் துரோகிகள் என்பதே வெள்ளிடைமலையாகும்.
தோழர் ரோகண விஜேவீர அவர்களை ஸ்தாபகத் தலைவராகக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யவில்லை. அதற்குப் பதிலாகத் தென்னிலங்கையில் இனக்கலவரங்கள் இடம்பெற்றபோதெல்லாம் ‘தமிழர்களைத் தாக்காதீர், அவர்கள் நமது உடன் பிறப்புக்கள்’ எனச் சுவரொட்டிகளைத் தலைநகர் கொழும்பிலும் ஏனைய கலவரப் பகுதிகளிலும் ஒட்டியதோடு மாத்திரமல்ல தமிழர்களைத் தமது வீட்டில் வைத்து பாதுகாத்தவர்களும் மக்கள் விடுதலை முன்னணியினராகும் என்பதைத் தமிழ் மக்களின் மிகு கவனத்திற்குக் கொண்டுவருகின்றோம். அத்தோடு தற்போதும்கூட விசாரணைகள் எதுவுமின்றி வருடக்கணக்காகச் சிறைவைக்கப்பட்டிருக்கும்தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய் எனச் சுவரொட்டிப் போராட்டத்தைக் கொழும்பிலும் சிங்கள மக்கள் பெருமளவில் வாழும் பல பிரதேசங்களிலும் முன்னெடுப்பவர்கள் மகக்ள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் தான் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
1949ஆம் ஆண்டு மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமையைப் பறித்தவர்கள், 1958ஆம் ஆண்டு இனக்கலவரத்தைத் தூண்டிவிட்டு தமிழ் மக்களைக் கொன்றொழித்தவர்கள், யாழ்ப்பாண மக்களின் அறிவுச் சுரங்கமான யாழ் பொது நூலகத்திற்குத் தீவைத்து 94 ஆயிரம் புத்தகங்களை சாம்பலாக்கிய அயோக்கியர்கள், 1978ஆம் ஆண்டு ஷஷபோர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்’ எனச் சன்னதமாடி மீண்டும் தமிழ் மக்களை இனச் சங்காரம் செய்தவர்கள், 1980களில் தமழ் மக்களின் நேச சக்தியான மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான தோழர் ரோகண விஜேவீர அவர்களையும் ஏனையத் தோழர்களையும், கொலை செய்தவர்கள் தமிழ் மக்களின் துரோகிகளா? அல்லது மக்கள் விடுதலை முன்னணித் தோழர்கள் துரோகிகளா? என உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள இந்நிலையில் தமிழ் மக்கள் தம்முடைய மனச்சாட்சியைத்தொட்டு ஐயந்திரிபறப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் ஆளும் கட்சிகளோடு ஆட்சி அதிகாரத்தில் பங்குபற்றிப் பதவி சுகம் கண்டுவரும் போலி இடதுசாரிகள் உள்ளடங்கலான அனைத்துத் தரப்பினரும் முதலாளித்துவ ஏகாதிபத்திய இன, மத பிரதேச குறியீட்டுக் கட்சிகளும் தமிழ்த் துரோகக் கட்சிகளே. வேடிக்கை யாதெனில் தமிழரிடமும் இசுலாமியரிடமும் அபரிமிதமாக வாக்குச் சேகரித்துக்கொண்டே அம் மக்களுக்குள் வெகுஜன அமைப்புகளாக விளங்கிக்கொள்ளும் இக் கட்சிகள் தமிழ் மக்களுக்கும், தேசத்திற்கும், ஒரு சேரத் துரோகம் செய்வதோடு தேசத்தை இந்திய நில விஸ்தரிப்புவாதிகளுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும், விற்பதற்குத் துணைபோய்க்கொண்டிருக்கின்றன. வடக்கின் எட்காவும், திருமலை துறைமுகத்தின் மீதான அமெரிக்காவின் கழுகுக் கண்களும் இச்சாபக்கேடான நிலைக்குச் சான்றாதாரமாக விளங்குகின்றன.
எனவே, தேசபக்த சக்திகளும் தமிழர் உரிமை விரும்பிகளும் எதிர்வரும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் நாடு தழுவிய அனைத்து முதலாளித்துவக் கட்சிகளையும் பிராந்திய அளவில் இயங்கிக்கொண்டிருக்கும், முதலாளித்துவ அணிகளையும், போலி இடதுசாரிக் கட்சிகளையும் தேசத்துரோக, தமிழர் துரோக, அணிகளென இனங்காண்பதோடு மக்கள் விடுதலை முன்னணி என்னும் ஓர் அணியை மட்டும் தேசபக்த தமிழர் நேச சக்தியெனத் தெளிவுறத் தெரிந்துகொண்டு தீவின் தமிழ் மக்கள் உள்ளடங்கலான அனைத்து மக்களும் அம்முன்னணியைத் தெரிவுசெய்து, அதாவது மணிக்கு வாக்களித்து முழுமையான அரசியல் மாற்றத்திற்கான மணியோசையை ஓங்கி ஒலிக்கச் செய்யத் தயங்காது ஓரணியில் திரளவேண்டும்
நன்றி
இராமலிங்கம் சந்திரசேகர்
மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்
வட மாகாண அமைப்பாளர்:-