குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
வவுணியாவில் முன்பு இயங்கிய பழைய பேரருந்து நிலையத்தினை மூடிவிடுமாறும், புதிதாக அமைக்கப்பட்ட பேரருந்து நிலையத்தில் இருந்து பேரருந்துச் சேவைகளை, இன்று முதல் ஆரம்பிக்குமாறும், வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்த உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் முதலமைச்சரின் உத்தரவை மீறி, பழைய பேரருந்து நிலையத்தில் இருந்தே சேவைகள் தொடர்வதாக வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வருட காலமாக, பல்வேறு தரப்பினரின் அழுத்தங்கள் காரணமாக, புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் பயன்பாடின்றி காணப்பட்டது. இந்த நிலையத்தில் இருந்து சேவைகளை ஆரம்பிப்பது குறித்த பல பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.
இந்த நிலையில் புதிய பேரருந்து நிலையத்தில் இருந்து இன்று முதல் இருந்து தனியார் மற்றும் அரச பேரருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என முதலமைச்சரால் பணிப்புரை வழங்கப்பட்டது. அத்துடன், இது வரைகாலமும் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நகரசபைக்கு சொந்தமான பகுதியை தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கு மட்டும் அனுமதி வழங்கும் வகையில், பேருந்துகள் உட்செல்லாமல் இருக்க 24ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் மூடுமாறு வடக்கு மாகாண சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, பழைய பேருந்து நிலையம் மூடப்படாமல் காணப்பட்டதுடன் காவற்துறையினர் மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு சென்றிருந்தனர். எனினும் பேருந்து நிலையத்தினை மூடுமாறு தமக்கு உத்தரவு கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள காவற்துறையினர், இது குறித்து நகரசபையினரே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். அவ்வாறு நகரசபையின் தீர்மானத்திற்கு ஏற்ப மூடப்படுமாயின் தாம் பாதுகாப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் பழைய பேருந்து நிலையப்பகுதிக்கு சென்ற வவுனியா தலைமையக காவற்துறைப் பொறுப்பதிகாரி, பேருந்து நிலையத்தினை மூடுமாறு நகரசபைச் செயலாளரிடம் கூறிய போதும், அவ்வாறான உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை எனவும் முதலமைச்சர் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருக்கே பணிப்புரை வழங்கியதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வழமைபோன்றே இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.