குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்…
இலங்கையில் இடம்பெறும் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்தியா கடுமையான அழுத்தத்திற்கும், விசனத்திற்கும் உள்ளாகி இருப்பதாக செய்திகளும் பதிவுகளும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இதற்கான உடனடி பதில் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாகவும், தனக்கு துணையாக ஜப்பானையும் களமிறக்கி உள்ளதாகவும் சீன அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்தியா ஜப்பானுடன் இணைந்து இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த முனைவதாக செய்தி வெளியிட்டுள்ள சீனாவின் குளோபல்ரைம்ஸ் ஊடகம், வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் தனது செல்வாக்கை, இலங்கையில் தக்கவைப்பதற்காகவே இந்தியா இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவின் கடந்த கால அரசியல் நிலைகுறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ள குளோபல்ரைம்ஸ், முன்னைய காலத்தில், இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்பதனை கணக்கில் எடுக்காமல், தனது கொல்லைபுற சாம்ராட்சியமாக கருதிய இந்தியா, தற்போதும் சீனாவிற்கும் ஏனைய நாடுகளிற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து ஆபத்தான மனோநிலையை கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை, இலங்கை அரசாங்கம் சீனாவிற்கு வழங்கிய நடவடிக்கை இரு நாடுகளுக்கும் அதிக நன்மைபயக்கும் விடயமாக அமையும் என குளோபல் ரைம்ஸ் கூறுகிறது. அந்த வகையில், இந்தக் குத்தகை உடன்படிக்கையானது, சீனா – துறைமுகத்தை இயக்குவதற்கும் வருமானத்தை பெறுவதற்கும் அனுமதி வழங்கியுள்ளது எனவும், அதேவேளை இது இலங்கையில் தொழில்வாய்ப்பு உருவாக்கத்திற்கும், உள்ளுர் பொருளாதாரத்திற்கும் வழிவகுக்கும் எனவும் சீன நிபுணர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி, குளோபல் ரைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில் சீனா மேற்கொண்டுள்ள முதலீடுகள் மிகப்பெரியவையும், மிக ஆபத்தானவையும், முழுமைபெறுவதற்கு பல வருடங்கள் எடுக்கக் கூடியவை எனவும், குறிப்பட்டுக் காட்டிய சீன நிபுணர்கள், இவற்றுக்கு அப்பாலும் அவை வருமானத்தை ஈட்டித்தரக் கூடின எனத் தெரிவித்துள்ளதாகவும் குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்த இந்தியாவின் நிலைப்பாடு, இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், என்ற மனோநிலையை கொண்டுள்ள அதிகாரிகளும், ஊடகங்களும், சர்வதேச சட்டங்கள் குறித்த அவர்களின் போதிய அறிவின்மையை வெளிப்படுத்தியுள்ளதாக அந்த நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனவும் குளோபல் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.
முடிவாக சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது, சமத்துவமும் பரஸ்பர நன்மையும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது என சீனாவின் சீன நிபுணர்கள் கருதுவதாக குளோபல் ரைம்ஸ் குறிப்பட்டுள்ளது.