குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்…
உள்ளூராட்சி தேர்தலும் அதன் முடிவுகளும் இலங்கையின் அரசியல் எதிர்காலத்தை, மாற்றத்தை கட்டியம் கூறுமா?
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் அதன் பின் வரப்போகும், அனைத்து தேர்தல்களிளும் குறிப்பாக ஜனாதிபதி தேர்தலின் மீதும் தாக்கம் செலுத்தும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், புதிய அரசியல் முகங்களை தெரிவு செய்வதன் மூலம், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னான மாற்றத்தை மக்களால் ஏற்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் முக்கியமான ஓரு தேர்தல் நாங்கள் இந்த தேர்தலின் பின்னர் மாகாணசபை தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் எதிர்கொள்ளவுள்ளோம் இவை அனைத்தும் நாட்டை மாற்றும் நாங்கள் பின்னோக்கி செல்ல முடியாது. குறிப்பிடத்தக்க அரசியல் அனுபவம் உள்ளவன் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதை நான் எதிர்வுகூறுகின்றேன்” எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
2015 இல் சந்தித்த பாரிய மாற்றத்தை நாடு மீண்டும் எதிர்கொள்ளும், புதிய முகங்கள் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவார்கள், பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும், அதேவேளை பழைய முகங்களை மக்கள் மறக்கும் நிலை ஏற்படும் அவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, நாமல் ராஜபக்சவிற்கான பாதையை வகுக்கவே, மகிந்த ராஜபக்ஸ ஏன் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற விரும்புகின்றார் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.