கிறிஸ்மஸ் தினமான நேற்றையதினம் ரஸ்ய போர்க்கப்பல் ஒன்று, பிரித்தானிய கடல் எல்லை அருகே சென்றதாகவும் அதனை பிரித்தானிய போர்க்கப்பல் ஒன்று கண்காணித்ததாகவும் பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது.
அட்மிரல் கோர்ஷோவ் எனும் அந்த ரஷ்யப் போர்க்கப்பலை பிரித்தானியாவின் தேசிய நலன்களுடன் தொடர்புடைய கடல் பகுதிகளில் எச்.எம்.எஸ் செயின்ட் அல்போன்ஸ் என்ற பிரித்தானிய போர்க் கப்பல் கண்காணித்துள்ளதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது. பிரித்தானிய கடல் எல்லை வழியாகச் செல்லும் ரஸ்யப் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த ரஸ்யக் கப்பலைக் கண்காணிப்பதற்காக நேற்றையதினம் கடலிலேயே இருந்த எச்.எம்.எஸ் செயின்ட் அல்பொன்ஸ் போர்ட்ஸ்மவுத் துறைமுகம் திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தநிலையில் தமது கடல் எல்லைகளைக் காக்கத் தயங்கமாட்டேன் எனவும் எவ்விதமான அச்சுறுத்தலையும் சகித்துக்கொள்ளவும் மாட்டேன் எனவும் பிரித்தானிய பாதுகாப்பு செயலர் கவின் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
Russian spy ship Admiral Vladimirsky was photographed Dec. 21 from an AgustaWestland AW159 Wildcat helicopter. (Royal Navy/European Pressphoto Agency/EFE/Shutterstock)
கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அருகே உள்ள வடக்குக் கடல் மற்றும் ஆங்கிலக் கால்வாய் பகுதியில் ஒரு ரஸ்ய உளவுக் கப்பல் சென்றதைத் தொடர்ந்து, எச்.எம்.எஸ் டைன் எனும் ரோந்துக் கப்பல் மற்றும் ஒரு கடற்படை ஹெலிகொப்டர் ஆகியவை அதைக் கண்காணிக்க அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதமும் ஒரு பிரித்தானிய போர்க்கப்பல் மற்றும் மூன்று பிரித்தானிய விமானப்படை விமானங்கள், அட்மிரல் குஸ்நெட்சோவ் எனும் ரஷ்ய விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் பிற கப்பல்களை ஆங்கிலக் கால்வாய் வழியே சூழ்ந்து சென்றுள்ளன. வடக்கு கடல் பகுதியில் உள்ள சர்வதேச கடல் பரப்பை மத்தியத் தரைக்கடலில் சிரியாவுக்கான உதவிகளை இறக்கச் செல்வதற்கான பாதையாக சமீப காலங்களில் ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
கடந்த 2014-இல் ரஷ்யா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதில் இருந்து, ரஸயா மற்றும் பிரித்தானியாவுடையேயான உறவு பதற்றமாகவே உள்ளது. இந்தநிலையில் வடக்கு கடல் பகுதியில் உள்ள தகவல் தொடர்பு இணைப்புகளைப் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவை துண்டிக்கப்பட்டால் அது பிரித்தானிய பொருளாதாரத்துக்கு பேரழிவை உண்டாக்கும் சாத்தியம் உண்டு எனவும் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் பிரித்தானியாவின் படைப்பிரிவுகளின் தலைவர் ஏர் சீப் மார்ஷல் சர் ஸ்டூவர்ட் பீச்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் சுமந்து செல்லும் அட்மிரல் கோர்ஷோவ் கப்பல் இன்னும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ரஸ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.