இந்தியாவின் கோவா – கர்நாடகா இடையேயுள்ள மகதாயி நதி நீர் பிரச்சனைக்கு தீர்வுகாண கோரி வடக்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாயிகள் சங்கத்தினர் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கோவாவில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு பாய்கின்ற மகதாயி நதி நீரை பங்கிடுவது தொடர்பில் 2 மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை காணப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கர்நாடகாவில் விவசாயிகளை சந்தித்து பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா இந்த பிரச்சினைக்கு டிசம்பர் 15ம் திகதிக்குள் தீர்வு காண்பேன் தெரிவித்த போதும் குறித்த திகதிக்குள் தீர்வு காணப்படவில்லை.
இதனைக் கண்டித்து பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகம் முன்பு இன்று 5-வது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து இன்று வடகர்நாடகாவில் 6 மாவட்டங்களில் முழு அடைப்புக்கு கன்னட அமைப்பினரும், விவசாயிகளும் அழைப்பு விடுத்ருந்தனர்.
இதைத் தொடர்ந்து குறித்த 6 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாகவும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இஅத்துடன் வீதியின் நடுவே டயர்களை போட்டு கன்னட அமைப்பினர் எரித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதனால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.