கேரள அரசின் சார்பில் இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பாடகி சித்ராவுக்கு வழங்கப்படுவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றுடன் மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி கேரள தேவஸ்தான துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலைக்கு சென்று சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்ததன் பின்னர் செய்தியாளர் பேட்டியளித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு சார்பில் 2012-ம் ஆண்டு முதல் சிறந்த பாடகர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஹரிவராசனம் விருது பாடகர் கே.ஜே.ஜேசுதாசுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு பாடகர்கள் ஜெயச்சந்திரன், ஜயன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமார், கங்கை அமரன் ஆகியோருக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்தவகையில் 2016-17-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருதுக்கு சினிமா பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தேர்வு செய்யப்பட்டு உள்ளார் எனவும் சபரிமலையில் எதிர்வரும் ஜனவரி 14ம் திகதி அவருக்கு விருது மற்றும் ஒலு லட்சம் ரூபா ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.