தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இறுதித் தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கையை இழந்துள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலைக்கழகம் என்ற புளொட்டின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவிடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு கிழக்கிலே கிளிநொச்சி, அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள பிரதேச சபைகளிற்கு எமது வேட்பாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுகின்றோம். தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஆதரவளித்து பெரு வெற்றிக்கு இட்டுச்செல்ல வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடனும் சர்வதேசத்துடனும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கின்றது.
இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடையுமானால் அது தமிழ் மக்களை பலவீனமாக்கின்ற ஒரு விடயமாக போகும். இங்கு எந்தக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கக்கூடிய அளவிற்கு ஆசனங்களை கைப்பற்றப்போவதில்லை. ஆகவே வாக்குகளைச் சிதறடித்து கூட்டமைப்பின் பலத்தை குறைக்கக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கையாகவுள்ளது.
தமிழ் மக்களுடைய அபிலாசைகள் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒர் இறுதித் தீர்வு ஒன்று வரும் என்று நான் நம்பவில்லை. இருந்தாலும் இந்த நடவடிக்கைகளில் இருந்து நாமாக விலகிக்கொண்டவர்களாக இருந்தால் இன்று இருக்கின்ற சூழலில், ஐக்கிய நாடுகள் சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அடியொட்டி, அல்லது சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாக இடம்பெறும் நடவடிக்கைகளை நாம் குழப்பியதாக அடையாளப்படுத்தப்படுவோம். இந்த செயற்பாடுகளின் மீது அழுத்தங்கள் ஏற்படும். வெளிநாட்டு இராஜதந்திரிகளும் தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை, குழப்பி விடாமல் முன் எடுத்துச்செல்வதற்கான வழியை மேற்கொள்ளுமாறு கூறுகின்றார்கள். ஆகவே அதை மீறி நாங்களாகவே குழப்பினால் சிங்களப் பேரின வாதத்திற்கு எமது விடயத்தைக் கையாழ்வதற்கு இலகுவாக்கி விடுவோம். ஆகவே இவ்விடயத்தினைக் குழப்பிக்கொண்டு வெளியே வர முடியாது” என தெரிவித்துள்ளார்.
1 comment
சித்தார்த்தனுடைய தேர்தல் பிரச்சாரம்:
1.போட்டியிடுகின்றோம் குழப்பிக்கொண்டு வெளியே வர முடியாது.
2.வாக்குகளைச் சிதறடித்து கூட்டமைப்பின் பலத்தை குறைக்கக்கூடாது.
3.எந்தக் கட்சியும் TNA எடுக்கக்கூடிய அளவிற்கு ஆசனங்களை கைப்பற்றப்போவதில்லை.
4.TNA பலவீனமடையுமானால் அது தமிழ் மக்களை பலவீனமாக்கின்ற ஒரு விடயமாக போகும்.
5.பிரதேச சபைகளிற்கு PLOTE வேட்பாளர்கள் TNA யின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடுகின்றர்கள்.
6.தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் ஆதரவளித்து PLOTE டை பெரு வெற்றிக்கு இட்டுச்செல்ல வேண்டும்.
பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடத்தி தமிழ் மக்களுடைய அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய கட்சிக்கு வாக்காளர்கள்ஆதரவு அளிக்க வேண்டும்.