பொறுப்பற்ற சமூக வலைத்தளப் பயன்பாட்டுக்கு எதிராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜனவரி ஜனாதிபதி பதிவியிலிருந்து விலகிய பின்னர் பிபிசி வானொலி 4-இன் நிகழ்ச்சி ஒன்றுக்காக பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு, வழங்கிய முக்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொறுப்பற்ற சமூக வலைத்தளப் பயன்பாடுகள் முக்கியமான விவகாரங்கள் குறித்த மக்களின் புரிதலைச் சிதைப்பதுடன், தவறான தகவல்களையும் பரப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் செய்திகளை சமூக வலைத்தளங்கள் சிதைப்பதாக தெரிவித்த ஒபாமா, அதிகாரத்தில் இருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பதிவிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உண்மைகளைப் புறந்தள்ளிவிட்டு, தங்கள் சொந்த கருத்துகளை வலுப்படுத்தும் விடயங்களையே மக்கள் வாசிக்கவும், கவனிக்கவும் செய்வார்கள் எனவும் ஒபாமா கவலை தெரிவித்துள்ளார்.
சமூகத்தைப் பிளவுபடுத்தாமல், அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் , பல்வேறு கருத்துகளைக் கொண்ட குரல்களை எழுப்பவும், பன்முகத்தன்மை நிறைந்த பார்வைகளை வெளிப்படுத்தவும் தொழில்நுட்பத்தை எவ்வாறு வளர்த்தெடுப்பது என்பதுதான் தற்போதுள்ள கேள்வி எனவும் ஒபாமா தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது அமெரிக்கா செல்லும் விதம் குறித்து கவலையாக உள்ளது எனவும் எனினும், ஒட்டுமொத்தமாக ஒரு அமைதி உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.