மும்பையில் குடியிருந்த வீட்டு பிரச்சனையில் தவித்த கமல் ஹாஸனின் முன்னாள் மனைவி சரிகாவுக்கு பொலிவுட் நடிகர் ஆமீர் கான் உதவி செய்ய முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2004ம் ஆண்டு, கமல் ஹாஸனும், சரிகாவும் பிரிந்தனர். இதனையடுத்து சரிகா மும்பையில் தனது தாயுடன் வசித்து வந்தார்.. சரிகாவின் தாய் கடந்த நவம்பர் மாதம் மரணமானார்.
சரிகாவின் வருமானத்தின் ஊடாக அவரது தாய் மும்பை ஜுஹு பகுதியில் மாடிக் குடியிருப்பு ஒன்றை வாங்கியிருந்தார். எனினும் அவர் இறந்தபோது அந்த மாடி வீடு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் சரிகாவுக்கு இல்லாமல் தனது குடும்ப நண்பரான வைத்தியர் விக்ரம் தாக்கர் என்பவருக்கு உயில் எழுதி வைத்துள்ளார். தான் உழைப்பில் வாங்கிய மாடிவீடு தனக்கு இல்லை என்பதை அறிந்த சரிகா அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பான நீதிமன்ற வழக்கில் அவரது காலம் கழிவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சரிகாவின் நெருங்கிய தோழியான, ஆமீர் கானின் சகோதரி நுஸ்ஸத் (நடிகர் இம்ரான் கானின் தாய்) சரிகாவின் அவலத்தை அறிந்து, அவருக்கு உதவுமாறு ஆமீர் கானிடம் கோரியுள்ள நிலையில் அவரும் சரிகாவுக்கு உதவ முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஸ்ருதி ஹாஸன் மும்பையில் தனியான மாடிக் குடியிருப்பை வாங்கி தனியாக வசித்து வருகிறார். அவரின் தங்கை அக்ஷரா சிறிது காலம் சரிகாவுடனும், சிறிது காலம் தந்தை கமலுடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.