மகதாயி நதி நீர் பங்கீட்டு பிரச்சினையில் பிரதமர் தலையிட கோரி வட கர்நாடகாவில் விவசாயிகள் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தியிருந்தனர் இதற்கு ஆதரவாக பாஜக, மஜத ஆகிய அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் இணைந்தமையினால் கர்நாடகாவில் ஒரு பரபரப்பான சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான மகதாயி நதிநீர் பங்கீடு விவகாரம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இதுகுறித்து மகதாயி நடுவர் மன்றம் எதிர்வரும் பெப்ரவரி முதல் இறுதி விசாரணை நடத்த உள்ளது.
கடந்த ஒக்டோபரில் கர்நாடக அரசு வட கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக 7.56 டிஎம்சி வழங்குமாறு தாக்கல் செய்த இடைக்கால மனுவை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு மகதாயி நீர் வழங்கக் கோரி கடிதம் எழுதிய போதும் கோவா அரசு தரப்பில் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை.
இதனால் வடகர்நாடகாவை சேர்ந்த விவசாயிகள் கோவா அரசை கண்டித்தும், பாஜக மாநில தலைவர் எடியூரப்பாவை கண்டித்தும் கடந்த ஒரு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகதாயி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி வடகர்நாடக மாவட்டங்களில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தியிருந்தனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை மகதாயி விவசாய சங்கத்தினர் சார்பாக நடத்திய பேரணியின் போது வீதியில் டயர் கொளுத்தியதால் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இதனிடையே புகையிரத நிலையமொன்றில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். அத்துடன் போராட்டக்காரர்கள் அரசு பேருந்தின் மீது கல்வீசியதில் பயணிகள் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து 5 மாவட்டங்களிலும் பலத்த காவற்துறைப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெங்களூருவிலும்; பாஜகவினர் கர்நாடக அரசை கண்டித்து காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனை தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக தொண்டர்களுடன் வீதியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது பாஜகவினர் முதலமைச்சர் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்து பேசியதால், காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்போது சிலர் கல்வீசியதில் பாஜக முன்னாள் அமைச்சர் அசோக்கின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அசோக், ஷோபா கரந்தலாஜே உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்னர்.
மகதாயி விவகாரத்தில் மீண்டும் வெடித்துள்ள விவசாயிகளின் போராட்டத்துக்கு கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட திரைப்பட வர்த்தக அமைப்பு, வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் போராட்டம் மேலும் வலுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.