ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள, ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த ஒரு கலாசார மற்றும் மத அமைப்பின் மையத்தில், வியாழன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 42 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததன் 38வது ஆண்டை நினைவுகூரும் நிகழ்ச்சி குறித்த கலாசார மையத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அந்த கலாசார மையத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்ட நேரத்தில், பல மாணவர்கள் மற்றும் ஊடகக் குழுவின் உறுப்பினர்களுடன் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோராத நிலையில் தலிபான் அமைப்பு தாங்கள் இந்த தாக்குலினை மேற்கொள்ளவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக காபூல் நகரில் உள்ள ஆப்கன் வொய்ஸ் என்ற இடத்தில் வெடித்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.