இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
யுத்தம் காரணமாக சட்டவிரோதமான முறையில் இந்தியா சென்ற இலங்கை அகதிகளின் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக இருக்கின்றார்கள் என அந்த அமைப்பின் ஸ்தாபகர் செல்வநாயகம்.சந்திரதாஸன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாடற்றவர்கள் என்ற நிலைமையை மாற்றியமைக்க தான் மேற்கொண்ட முயற்சியின் பயனாக இந்தியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் தற்காலிக குடியுரிமையொன்று வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தியாவிலிருந்து மீண்டும் இலங்கை திரும்பும் குறித்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள அரசாங்கம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கட்டணமாக அறவிடுவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.