கழிப்பறையின் பயனை உணர்த்தும் வகையில் காஞ்சிபுரத்தில் கிராம மக்களுக்காக கழிப்பறை கட்ட நடிகை த்ரிஷா நேரடியாக களத்தில் செங்கல், சிமெண்ட் கொண்டு கழிப்பறை கட்டினார். இதை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
எந்த பொருளுக்கும் விளம்பரம் மிக முக்கியம். அதிலும் தமிழகத்தில் மிக மிக முக்கியம். அதிலும் சினிமா நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரப்படுத்தினால் அதற்கு தனி கவனிப்பு உண்டு. அந்த வகையில் மக்களுக்குச் சேர வேண்டிய விழிப்புணர்வு பிரச்சாரங்களில் நடிகர் நடிகைகளை வைத்து நடிக்க வைப்பதன் மூலம் மக்கள அவற்றை கவனிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தியா முழுவதும் அடித்தட்டு மக்கள், குழந்தைகள், பெண்களுக்கான சுகாதாரம், கல்வி வாழ்க்கை மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் நிறுவனம் யூனிசெப் இந்தியா நிறுவனம் ஆகும். சமீபத்தில் குற்றம் இழைக்கும் குழந்தைகளை, காவல் நிலையத்தில், மற்ற கைதிகள் போல் பராமரிக்கும் நிலையை மாற்ற, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் குற்றங்களை கவனிக்க தனி காவற்துறை அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காவல் உயர் அதிகாரிகளை இணைத்து பயிற்சி வகுப்பை நடத்தினர்.
இந்தியாவில் குழந்தைகள் சுகாதாரம், வளர்ச்சி ஆகியவற்றுக்கு கழிப்பறை இல்லாத நிலையும் ஒரு காரணம் என யுனிசெஃப் நிறுவனம் கூறி வருகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கழிப்பறை அவசியம் என்பதால் மத்திய அரசே இதற்கான நிதியை ஒதுக்கி கிராமந்தோறும் இதற்கான நடைமுறைகளை கொண்டுச்செல்கிறது.
யுனிசெஃப் நிறுவனமும் கழிப்பறைகள் தேவை, எளிய முறையில் கழிப்பறை கட்டுவது போன்ற திட்டங்களை கிராமந்தோறும் கொண்டுச்செல்கிறது. கிராம மக்களுக்கு கழிப்பறையின் அவசியம் குறித்து புரிதலை உண்டாக்க நடிகை த்ரிஷா மூலம் பிரச்சாரம் செய்கின்றனர். நடிகை த்ரிஷா விலங்குகள் மேல் ஆர்வம் கொண்டவர், பொது சேவையிலும் ஈடுபாடு கொண்டவர். அவரை யுனிசெஃப் தங்களது தூதராக நியமித்துள்ளது. இதனிடையே நேற்று காஞ்சிபுரம் அருகே உள்ள வடநெமிலி என்ற கிராமத்திற்கு த்ரிஷா சென்றார். கழிப்பறையின் அவசியம் வீடுதோறும் கழிப்பறை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கழிப்பறை கட்டும் ஒரு இடத்திற்கு சென்ற த்ரிஷா தானே செங்கள் சிமெண்டை எடுத்து கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டார்.
அதனை அங்குள்ள கிராம மக்கள் குறிப்பாக பெண்கள் ஆர்வமுடன் பார்த்தனர். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட த்ரிஷா அங்குள்ள பெண்களுடன் உரையாடினார்.கழிப்பறையின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், யுனிசெஃப் அதிகாரிகள், தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர்.