நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது பிற மதத்தைபுண்படுத்தும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் பாடல் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது சாமிக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது.
சாமிக்கு காணிக்கை கொடுத்தால் தேர்வில் வெற்றி பெற்றுவிடலாம் என்றால் யாரும் தேர்வுக்கு போக வேண்டாம், உண்டியலில் காணிக்கை போட்டுவிட்டு வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்து மக்கள் முன்னணி நிர்வாகியான நாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் மக்களின் மத உணர்வைப் புண்படுத்தும் வகையில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர் மீது முறைப்பாடு செய்திருந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிய உத்தரவிடுமாறும் குறிப்பிட்டிருந்தார்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகர் மீதான முறைப்பாட்டில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியுமாறு உத்தரவிட்டிருந்தத நிலையில் விருகம்பாக்கம் காவல்துறையினர் எஸ்.ஏ.சந்திரசேகர் பிறமதத்தை புண்படுத்தும் வகையில் பேசியதாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எஸ்.எ.சந்திரசேகர் மீது ஜாமினில் வெளிவரும் பிரிவினி கீழ் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.