நல்லிணக்க அரசாங்கம் என்ற தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்கான, இரண்டுவருடத்திற்கான ஆட்சிக்குரிய ஒப்பந்த காலம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. 2015ல் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட நாட்டின் முக்கிய கட்சிகள் பலவற்றின் பொதுவேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். தெனைத்தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பும் அவரைச் சென்று சேர்ந்தது.
தொடர்ச்சியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெறாத நிலையில், அதிக ஆசனங்களை தெனித்து பெற்ற கட்சியாக ஐக்கியதேசியக் கட்சி உருவெடுத்ததன் காரணமாக தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.
நாட்டின் பிரதமராக பொறுப்பெற்ற தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியாக தேர்வான, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில், கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி தேசிய அரசாங்கத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
நல்லிணக்கத்திற்கான இந்த ஒப்பந்தத்தை நீடிப்பது தொடர்பில் இரு கட்சிகளுமே ஆர்வம் காட்டாத நிலையில், இரு தரப்பினருமே தனித்து செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒரு புறம் தேசிய அரசாங்கத்தை மேலும் நீடிக்க வேண்டாமென சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியை வலியுறுத்த, மறுபக்கம் தனித்து ஆட்சி அமைப்போம் என ஐக்கியதேசியக் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இவற்றை தாண்டி தேசிய அரசாங்கத்தின் கால நீட்சி அவசியமானது எனவும், அதனை முடிவுறுத்துவது தற்போதைய சூழலில் உகந்தது அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க எச்சரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து தற்போது எதையும் தீர்மானிப்பதில்லையென ஜனாதிபதி கூறியுள்ளதாக கொழும்பின் அரசியல் தகவல்கள் கூறுகின்றன.