குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு காலாப்பேட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்துசெய்யக்கோரி அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவினை விசாரித்த போதே நீதிபதிகள் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளனர்.
சமூகவிரோதிகளை ஒடுக்க வேண்டும் என்பதற்காகவே குண்டர் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிற என்ற போதிலும் அந்த சட்டத்தை பிரயோகிக்கும்போது அதிகாரிகள் சட்ட நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் இருந்து தனது கணவரை விடுவிக்கக்கோரி மனுதாரர் அளித்த கோரிக்கை மனுவை அரச அதிகாரிகள் முறையாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்காமல் கடமையை தட்டிக்கழித்துள்ளனர் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ஆத்துடன் மனுதாரரின் கணவர் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்டத்தினை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதிகள் இனிவரும் காலங்களில் குண்டர் தடுப்பு சட்டத்தை பிரயோகிக்கும்போது சமூகவிரோதிகள் எளிதில் தப்பிக்காமல் இருக்கும் சட்ட நடைமுறைகளை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.