குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மத சின்னங்கள் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டும் உடைக்கப்படும் வருகின்ற நிலையில் மத தலைவர்களிடமும் மக்களிடமும் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மத நல்லிணக்கமானது சிதைவடைய கூடிய வாய்ப்பே காணப்படுகின்றது என மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.
கரிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடை முறை படுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வ மத செயற்பாடுகளின் ஒரு பகுதியான பல்வேறுபட்ட மத மற்றும் இனத்தை பிரதி நித்துவப்படுத்தும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வேறுவேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளர்h.
குறித்த நிகழ்வு நேற்று வெள்ளிகிழமை(19) மாலை 4.30 மணியளவில் செ.அன்ரன் அடிகளார் தலைமையில் வட்டக்கண்டல் பாடசாலை பொது மண்டபத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கொழும்பு மறை மாவட்டத்தை சேர்ந்த மும் மத மற்றும் சிங்கள மக்கள் பிரதிநிதிகளும் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் அங்கு உரையாற்றிய செ.அன்ரன் அடிகளார் சிலை உடைப்புக்கள் மூலம் நல்லிணக்கத்தை சீர் குலைக்க இடமளிக்கக்கூடாது எனவும் நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இங்கு வருகை தந்த சிங்கள மக்கள் அனைவரும் இங்கு வாழும் மக்களின் உண்மை நிலையை அறிய வேண்டும். -கடந்த 30 வருட போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையை அறிய முயற்சியுங்கள். அவ்வாறு அறிவதன் மூலமே உண்மையான சமாதானத்தையும் சகவாழ்வையும் அடைய முடியும் என மேலும் தெரிவித்தார்.