ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர என்ற அதிகாரியே திருப்பியனுப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
ஐ.நா. அமைதிப்படையில் பங்கேற்றுள்ள இலங்கை இராணுவத்தின் 200 பேர் கொண்ட குழுவின் தளபதியாக இவர் அனுப்பப்பட்டார். எனினும் மனித உரிமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் கண்டறியப்பட்டதன் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ், இலங்கை அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும், ஐ.நா. பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது தமிழர்களுக்கு எதிரான அட்டூழியங்களில், குறிப்பாக இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுடன் லெ..கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச மனித உரிமைகள் குழு, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் (ITJP) ஆகியன லண்டனிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் ஐ.நா. அமைதிகாப்பாளர்களாக பணியாற்றுவதற்காக 56ஆவது அணியின் சிறப்பு அதிரடிப் படைகளின் 56 paramilitary Special Task Force (STF) தளபதி அனுப்பப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இதன் அடிப்படையில் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. அமைப்பு முறைமையால் (UN says system) (IC) மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில், லெ..கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுர முன்னணியில் இருந்த தளபதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன் ITJP யுத்தக் குற்றங்கள் புரிந்தவர்களின் பெயர்களை ரகசியமாக வைத்திருந்தாலும், அதன் நிறைவேற்று இயக்குநர் யாஸ்மின் சூகோ, கருத்து வெளியிட்ட போது, “ஆப்பிரிக்காவில் ஐ.நா. அமைதிகாப்புப் பணியில் தற்போது பணியாற்றும் ஒரு STF அதிகாரி, 2006 – 2007ல் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் பலரின் மரணங்களுக்கு உத்தரவிட்டவர் எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை மனித உரிமைகள் மீறல்களின் “கணிசமான தரவுத்தளங்கள்” அவரின் அமைப்புக்கு இருப்பதாகவும், ஐ.நா. விசாரணைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக யாஸ்மின் சூகோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.