ரஸ்யாவுடனான வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 1987ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஸ்யா நாடுகளுக்கிடையே கையெழுத்தான நடுத்தர தூர அணு ஆயுதங்கள் உடன்படிக்கையின் சரத்துகளை ரஸ்யா மீறியுள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி நிலத்தில் இருந்து ஏவப்படும், 500 முதல் 5,500 கிலோ மீற்றர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த அணு ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்தக் கூடாது.எனினும் ரஸ்யா இந்த உடன்படிக்கையை மீறி அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை அமெரிக்கா அனுமதிக்காது எனவும் அமெரிக்கா அத்தகைய செயலில் ஈடுபடாது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதேவேளை நோவேட்டர்-9M729 எனும் நடுத்தர ரக அணு ஆயுத ஏவுகணையை ரஸ்யா தயாரித்துள்ளதாகவும் இந்த ஏவுகணை மூலம் அருகிலுள்ள நேட்டோ நாடுகளை ரஸ்யாவால் தாக்க முடியும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே 1987இல் கையெழுத்தான இந்த உடன்படிக்கை நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கின்றது என்பதுடன் கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது