தற்போது முன்னெடுக்கப்படும் கிராம எல்லைகள் நிர்ணய முயற்சி தொடர்பாக 21.10.2018 அன்று மாலை 4மணியளவில் இணுவில் கிராமத்தில் இணுவில் கிழக்கு சிவகாம சுந்திரி மெ்மன் கோவிலுக்கு அருகே உள்ள கல்யாண மண்டபத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
அயல் கிராமங்களின் எல்லை அகலிப்பு நடவடிக்கையால் நலிவுற்றுக் காணப்படும் இணுவில் கிராம எல்லைகளை மீள் நிர்ணயந் தொடர்பாக அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டியே இக் கூட்டம் நடைபெற்றது. யுத்தாகாலத்தின்போது இணுவில் கிராமத்தைச் சேர்ந்த தெருக்கள் பல அயல்கிராமமாக எல்லைப்படுத்தப் பட்டிருப்பதும், வீதிப் பெயர்கள் எல்லாம் தான்தோன்றித்தனமாக மாற்றப்பட்டிருப்பதும் இப்போது தெரிய வந்திருக்கிறது. விளம்பரதாரர்களால் வீதிப் பெயர்ப்பலகை நாட்டப்பட்டபோதே அவை எந்த உள்ளூராட்சி மற்றும் பிரதேசசபைக்கு உரித்தானதென்பது தெரியவந்திருக்கிறது என இணுவில் கிராம வாசி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் உள்ளூராட்சி தேர்த்தலை இலக்குவைத்தே இவ் எல்லை அகலிப்பு நடைபெற்றிருக்கிறது. இது ஒரிரு நபர்கள் தமது சுய அரசியல் லாபத்திற்காகச் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கையே ஒழிய மக்கள் விருப்பைப் பெற்று ஏற்ப்படுத்தப்பட்டதல்ல. அப்படி எல்லை மாற்றப்பட்ட பகுதிகளில் வாழும் பலர் தாம் இன்னும் இணுவில் எல்லைக்குள் வாழ்வதாகவும் தமது விலாசத்தை இன்னும் இணுவில் கிழக்கு என்றே இட்டுவருவதாகவும் அவர் சொன்னார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசாங்க நில அளவையாளர்கள் புதிய எல்லைகளை அளந்து நிர்ணயிப்பதற்காக அப்பகுதிக்கு வந்தபோதே இந்தப் பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மக்கள் ஒன்று கூடி நில அளவையாளர்களை நிலத்தை அளக்க வேண்டாம் என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.
இன்றைய கூட்டத்திற்கு ஒரு பொது அழைப்பே விடப்பட்டது. இருந்தும் பலர் அக்கறையோடு கலந்து கொண்டனர். கூட்டத் தீர்மானத்தின்படி மறுநாள் காலை 8மணியளவில் இது பற்றி மகஜர் ஒன்றும் வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தலைவருக்கும், பிரதேசச் செயலருக்கும் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.