அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார். இதனையே இப்போது நான் சொல்லும் போது குறைந்தது ஒரு நூறு அடிக்கு கிணறு வெட்டவேண்டும் என்றே கூறுவேன் அப்போதுதான் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது. இதனையே நாளை எனது பிள்ளைகள் எப்படிக் கூறப் போகின்றார்கள்?!
இதுதான் கடந்த ஜந்துதசாப்த் தங்களுக்குள் நிலத்தடிநீரில் ஏற்பட்டமாற்றம். உலகமெங்கு நிலத்தடிநீரில் பாரியளவில் மாற்றம் ஏற்பட்டுவருகிறது. நாளாந்தம் அதிகளவு நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு ஈடாக நிலத்தில் நீர் சேமிக்கப்படுவதில்லை. பருவமழை வீழ்ச்சியும் கடந்த காலங்கள் போன்றுதற்போது இல்லை,பெய்கின்ற மழைநீரும் நிலத்தடிக்கு சென்றுசேமிக்கப்படுவதனை விட ஆறுகளில் சேர்ந்து கடலுக்கு செல்வது அதிகமாகியுள்ளது. இதனால் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாகவே எண்பதுகளில் பத்து பதினைந்து அடி ஆழத்தில் காணப்பட்ட நிலத்தடிநீர் தற்போது நூறு அடிவரை சென்றிருக்கிறது.
உலக அளவில் உள்ள தண்ணீரில் வெறும் 04 வீத நீர் மட்டுமே குடிநீராக உள்ளது. அந்த நீரும் தற்போது குறைந்தும்இ மாசுபட்டும் வருகின்றமை உலக உயிரினத்திற்கே விடுக்கப்பட்டிருக்கும் சவலாகும். 1995 இற்குப் பின்பு புவியின் வெப்பம் பெருமளவுக்கு அதிகரித்து வருகிறது என ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.இதன் தாக்கமே புவியின் சாதாரண வெப்ப அளவின் விகிதம் பெருமளவுக்கு கூடியிருக்கிறது. கரியமிலவாயுஇ ஓசோன் மண்டலத்தாக்கம்இ என்பவற்றோடு காடுகளை அழிப்பதும் எரிபொருட்களின் வெப்பநிலை என்பன புவியின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணங்களாக அமைகின்றன. நான்கு இலட்சம் ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு புவியில் காபனீரொட்சைட் அதிகரித்திருக்கிறது எனவும் ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தொழிற்சாலைகள் எனவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தக் கரியமில வாயுவினால் புவிக்கும்இ சூரியனுக்கும் இடையே உள்ள மிலன்கோவிட்ச் வலயம் பாதிப்படையும் என்றுமு் அதன் விளைவு துருவப் பனி வேகமாக உருகும் எனவும் இதனால் துருவ நன்னீர் வளமும் குறைவடையும் ஆய்வுகள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றன.
இந்த நிலைமைகள் பொதுவாக உலக நன்னீர் நிலைமைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற எச்சரிக்கையுடனான ஆய்வுகள் ஆகும். நன்னீர் நிலைமைகள் தொர்பில் வடக்கிலும் இதே நிலைமைதான் இன்று ஏற்பட்டுள்ளது. வடக்கின் நிலத்தடி நீர் மிக மோசமான அளவில் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. வருடத்திற்கு வருடம் நிலத்தடி நீரில் மாற்றம் ஏற்பட்டு வருவது வெளிப்படையாக தெரிவதாக நீர்ப்பாசனத் திணைக்கள பொறியிளலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலத்தடி நீர் தொடர்பில் கவணிக்கப்பட்ட, கணிக்கப்பட்ட சில விடயங்களை இப் பத்தி சுட்டிக்காட்ட விளைகிறது.
கிளிநொச்சி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் முப்பது மீற்றருக்கு குறைவான உயரத்தை கொண்ட ஒரு மாவட்டம். கிளிநொச்சி நகரும், இரணைமடு உட்பட நகரை அண்டிய சில பகுதிகளுமே முப்பது மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. ஏனைய பிரதேசங்கள் அதனிலும் குறைவான உயரத்தில் உள்ளன குறிப்பாக பூநகரி,பளை, கண்டாவளையின் சில பகுதிகளில் கடல் மட்டத்திற்கு நிலத்திற்குமான உயரம் ஜந்து அடிகள்,பத்து அடிகள் எனும் அளவிலே காணப்படுகிறது. எனவே கடல் மட்டத்தில் இருந்து சொற்ப அளவு உயரம் கொண்ட மாவட்டமே கிளிநொச்சியாகும்.
அவ்வாறான ஒரு மாவட்டத்தில் நிலத்தடி நீரை பயன்படுத்துகின்ற முறையும், பயன்படுத்துகின்ற அளவும் நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்க வேண்டும். நிலத்தடி நீர் என்பது வரையறுக்கப்பட்ட அளவாகும். நிலத்தடி நீர் வளம் பெருகி வருகின்ற வளம் அல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். பத்து பதினைந்து அடிகள் ஆழத்தில் காணப்பட்ட நிலத்தடி நீர் நூறு அடிகள் வரை சென்றிருப்பதன் காரணம் அதுவே. மேலே குறிப்பிட்ட பல்வேறு காரணங்களே நிலத்தடி நீரை பாதிக்கின்ற காரணிகளாக அமைந்து வருகின்றன. மேற்படி இந்தக் காரணிகள் மனித நடவடிக்கையின் விளைவே.
கிளிநொச்சியின் தரைத்தோற்ற அம்சங்களை பொறுத்தவரை யாழ்ப்பாணம் கிளிநொச்சி தொடர்ச்சியான தரைத்தோற்றத்தின் அடிப்படையில் நிலத்திற்கு கீழ் நீர் பாறைகளில் தேங்கி நிற்கிறது. பாhறைகளின் இடுக்குகளில் தேங்கி நிற்கும் அதேவேளை தொடராக அருவிகள் போன்றும் நிலத்திற்கு கீழ் நீர் தேங்கி காணப்படுகிறது. இந்த நிலத்தடி நீரையே மனித குலம் தனது அனைத்து தேவைகளுக்கும் பெற்று வருகிறது. ஆனால் நீரை பெறுகின்ற. பயன்படுத்துகின்ற வழிமுறைகளில் இன்னமும் பொறுப்பான ஒரு நிலையினை அடையவில்லை. நீர் முகாமைத்துவம் கொஞ்சமும் கடைப்பிடிக்கப்படவில்லை. குடிநீர் தொடக்கம் விவசாயம், தொழிற்சாலைகள் வரை அளவுக்கு அதிகமான நீர் பயன்பாடே இடம்பெற்று வருகிறது. இது நிலத்தடி நீரை வேகமாக குறைத்து வருகிறது. மேலும் மழை நீர் சேமிப்பு திட்டங்கள் என்பதும் மிக குறைவான அளவிலேயே ஆங்காங்கே காணப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து செல்லும் அதேவேளை கரையோரங்களில் இருந்து நிலம் படிப்படியாக உவராகியும் வருகின்றது. நிலம் உவராகி வருகின்றமைக்கு பிரதான காரணம் நிலத்தடி நீர் இன்மையே. நிலத்தடி நீர் இன்மைக்கு கிளிநொச்சியில் மிக முக்கிய காரணியாக அன்மைக்காலங்களில் உணரப்பட்ட ஒரு விடயம் குழாய் கிணறுகள்.
கடல் மட்டத்தில் இருந்து மிக குறைந்த உயரத்தில் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்டத்தில் சமீபகாலமாக நாளாந்தம் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தக் குழாய் கிணறுகள் குறைந்தது 100,150 அடிகளாக காணப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 30 மீற்றருக்கு மேற்படாத ஒரு நிலப்பரப்பில் 100,150 அடிகளில் குழாய் கிணறுகள் அமைக்கப்படுவது. நிலத்தடி நீருக்கான புதைகுழிகளாகவே கருதப்படுகிறது.
சீரான பருவமழை இல்லை இதனால் பாரிய மற்றும் சிறிய குளங்களில் நீர் வற்றிப்போய் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த நிலைமைகளை சமாளிக்க நாளாந்தம் மாவட்டத்தின் பல பிரதேங்களில் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சியில் சுமார் பத்து வரையான குழாய் கிணறுகள் அமைக்கும் தனியார் நிறுவனங்கள் காணப்படுகின்றன இவர்கள் நாளாந்தம் மாவட்டத்தின் எங்கோ ஒர் இடத்தில் குழாய் கிணறு அமைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இவர்களால் குறைந்து வருடத்திற்கு முன்னூறு குழாய் கிணறுகளாவது அமைக்கப்படும் என நீர்பாசனத் திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு அமைக்கப்படும் குழாய் கிணறுகள் மூலம் நாளாந்த பயன்பாடு தொடக்கம் விவசாய நடவடிக்கைகள் வரை நீர் பெருமளவு உறிஞ்சப்படுகிறது. ஒரு புறம் சீரான பருவமழை இல்லை, இதனால் நீர் சேமிப்பு அற்ற சூழல், இந்த நிலையில் ஏற்கனவே நிலத்தடியில் சேமிக்கப்பட்டிருந்த நீரை திட்டமிடாது பயன்படுத்துகின்ற பழக்கத்தோசம் என எல்லா நடவடிக்கைகளும் கிளிநொச்சியின் நிலத்தடி நீரை வெகுவாக பாதித்திருக்கிறது. பாதித்து வருகிறது.
கடல் மட்டத்தில் இருந்து முப்பது மீற்றர்களே உயரமான கிளிநொச்சியின் சில பகுதிகளில் நூறு அடிகளுக்கு மேல் குழாய் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சி எடுக்கின்ற நடவடிக்கைகளால் நிலத்தடி நீர் வற்றிப்போகிறது. இதன் விளைவாக உயரத்தில் இருக்கின்ற கடல் நீர் பள்ளத்தில் வெற்றிடமாக உள்ள நிலத்தை நோக்கி ஊடுருகின்றது.
. இவ்வாறு ஊடுருவி வருகின்ற கடல் நீர் நன்னீர் தேங்கி நின்ற பாறைகளில் தங்கி விடுகிறது. அவ்வாறு தேங்கி நிற்கின்ற கடல் நீர் அப்படியே மேல் நோக்கியும் ஊடுருவி பரவுகிறது. இதன் விளைவு நிலம் உவராக மாறி பயன்பாடற்று போகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் இவ்வாறு உவராகி வரும் நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளன.ஆதாவது இந்த நிலைமை ஒரு புற்றுநோய் போன்று பரவி வருகிறது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் வன்னேரிக்குளத்தின் பெரும் பகுதி இந்த நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
வன்னேரிக்குளத்திற்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் தற்போது மக்கள் இல்லை நிலமும் விவசாய நடவடிக்கைக்கு பொருத்தமற்ற நிலமாக மாறிவிட்டது காரணம் நிலமும் நீரும் உவராக மாற்றமடைந்தமையே. அவ்வாறே மாவட்டத்தின் பல கிராமங்கள் காணப்படுகின்றன.
கிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள நீர்த் தேவையை உடனடியாக பூர்த்தி செய்துகொள்ள மக்கள் குழாய் கிணறுகளை அமைப்பதில் அதிகம் ஆர்வாம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவில் தேவையை பூர்த்தி செய்யும் வழியாக குழாய் கிணறுகள் காணப்படுகின்றன. குழாய் கிணறு அமைப்பதற்கு அடிக்கு ஆயிரம் ரூபா என்ற அளவில் இருந்த கூலி தற்போது 750 ரூபாவாக குறைந்துமுள்ளது. எனவே பொது மக்கள் தங்களின் நீர்த் தேவைக்கு குழாய் கிணறு அமைப்பதனையே நாடுகின்றனர்.
ஆழமான குழாய் கிணறுகளை அமைத்து பல கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள கடல் நீரை நிலத்தை நோக்கி கொண்டு வரும் செயற்பாடுகளை மனிதனே மேற்கொண்டு வருகின்றான். இப்போது வாழ்கின்ற நான் நல்ல தண்ணீரை பெற்றுக்கொண்டால் போதுமானது எனது பிள்ளைகளோ பிள்ளைகளின் பிள்ளைகளே எப்படியும் போகட்டும் என்ற மனநிலை வெளிப்பாட்டின் விளைவே இது. குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள் மட்டுமல்ல விவசாயத்திற்குரியதும். பெற்றோலிய வளம் எவ்வாறு அருகி செல்லும் காலம் நெருங்கி விட்டதோ அவ்வாறே நீரும் அருகி செல்லும் காலம் நெருங்கி வருகிறது. கவிஞர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகளில் சொன்னால் விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டனர் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டனர் என்பது போல் இந்த நிலத்தடி நீர் விடயத்தில் கிளிநொச்சி வழித்துக்கொண்டால் பிழைத்துக்கொள்ளும்.