தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் காற்று மாசு ஏற்படுவதை தடுப்பதற்காக குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருகிறது.
தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசானது மிகவும் அதிகமாக உள்ளது. கடந்த வருடம் தீபாவளி பண்டிகை யின்போது, சென்னை சவுக்கார் பேட்டையில் 777 மைக்ரோ கிராம் அளவு காற்று மாசு பதிவாகியிருந்தது.காற்றில் மிதக்கும் 10 மைக்ரோ கிராமுக்கும் குறைவான அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு கன மீற்றர் காற்றில் எவ்வளவு உள்ளது என்பதன் அடிப்படையில் காற்று மாசு கணக்கிடப் படுகிறது.
10 மைக்ரோ கிராம் அளவுள்ள துகள்கள், ஒரு கன மீற்றர் காற்றில் 100 மைக்ரோ கிராம் வரை இடம்பெற்றிருப்பது, அனுமதிக்கப்பட்ட அளவாக உள்ளது. எனினும் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்ட அளவை விட 7 மடங்கு மாசு அதிகரித்திருந்ததனால் தீபாவளி தினத்தன்று காற்று மாசு கணக்கிடப்பட்ட நகரங்களில் சென்னை, தேசிய அள வில் முதலிடம் பிடித்தது.
அன்றரவு, சென்னையில் பலர் சுவாசக் கோளாறு, தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த மாசு நுரையீரலில் தங்கி, புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையின்போது குறிப்பிட்ட பொது இடங்களில் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது