வடக்கு கொலம்பியாவின் பாரம்கேபர்மேஜா நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னர் நீண்ட நேரம் தேடுதலுக்குப் பின்னர் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக மெக்சிகோ மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் சிறுவர்கள் எனவும் தெரிவித்த அவர்கள் இந்த நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிகாலையில் ஏற்பட்ட கனமழை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக ஏராளமான வீடுகள் புதைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கனமழை காரணமாக கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது