குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று இல்லை என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழில். உள்ள தனது இல்லத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது அம்மாச்சி தொடர்பில் தான் கூறிய கருத்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை என குறிப்பிட்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே இவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
ஊடக சந்திப்பில் நான் எந்த ஒரு இடத்திலும் இருக்கின்ற அம்மாச்சியினுடைய பெயரினை மாற்றம் செய்யப்போவதாக சொல்லவில்லை இந்த ஊடக சந்திப்பில் எனது கருத்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை அல்லது தெளிவாக விளங்கி கொள்ளவில்லை என்றே கருதுகின்றேன்.
ஊடகவியலாளர்கள் சூழலிற்கு வெளியேயான கருப்பொருளிற்கு சென்றுள்ளனர். மாகாண சபை முடிந்ததும் அம்மாச்சியை அழிக்கும் திட்டம் எம்மிடம் இல்லை இது மத்திய அரசின் திட்டம் என்பதனையே நான் கூறுகின்றேன். அதாவது அம்மாச்சி உணவகம் என்பது வடமாகாண சபைக்குரிய திட்டம் இல்லை இது முற்று முழுதாக மத்திய அரசினுடைய திட்டம் இதனை மாகாண அரசு மாகாண அரசினுடைய திட்டம் என்ற ஒரு மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளனர் இது எமக்கான ஒரு அவமானம் இதைத்தான் நான் குறிப்பிட்டேன்.
யாழ் மாவட்டத்தில் இன்னும் பல உணவகங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன இதற்கு அம்மாச்சி என்ற பெயர்தான் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்று இல்லை ஆனால் எமது பிரதேசத்தில் அமையும் போது அது தமிழில், தமிழ் பாரம்பரியத்தில் தான் இருக்க வேண்டும் என்பதே தமிழர் ஒவ்வொருவரினதும் விருப்பமாகும் அதுவே எனது எதிர்பார்ப்பு. இதனை தான் நான் கூற வந்தேன்.
எனக்கு மத்திய அரசினுடைய திட்டத்தினையோ அல்லது மாகாண அரசினுடைய திட்டத்தினையோ எனது திட்டம் என மார் தட்டிக்கொள்ளும் எண்ணமும் எனக்கு இல்லை அத்துடன் எப்பொழுதும் எனக்கு மாகாண அரசின் அதிகாரத்தை குறைக்கும் எண்ணமோ அல்லது மத்திய அரசிற்கு அதிகரித்து கொடுக்கும் எண்ணமோ என்னிடம் இல்லை என மேலும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.