ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது குறித்த பிரெக்சிற் தொடர்பான இணக்கப்பாட்டில், 95 சதவீதமானவை ஏற்கெனவே பூர்த்தியாகிவிட்டதாக பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். எனினும், இவ்விடயத்தில் வட அயர்லாந்து எல்லை தொடர்பில், தனது அதிருப்தியையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பிரெக்சிற் நடைமுறைக்கு வருவதற்குச் சில மாதங்களே உள்ள நிலையில், இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படாமை தொடர்பில் பிரதமர் மே-இன் பிரெக்சிற் திட்டம் தொடர்பாக, உள்நாட்டிலும் அவரது அமைச்சரவைக்குள்ளும் எதிர்ப்புகள் எழுந்த வண்ணமுள்ளன.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதமர் மே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளதுடன் அநேகமான விடயங்களில் தெளிவு ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வட அயர்லாந்து எல்லை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், அவ்வாறான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட முடியாது என்ற நிலை காணப்படுகிறது. பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒரே எல்லையாக, வட அயர்லாந்து எல்லையே காணப்படும் நிலையில், அவ்வெல்லையில் எவ்வாறான நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென்பதில், இரு தரப்புகளும் முரண்பாடான நிலையினை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
அதேவேளை இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சமர்ப்பித்துள்ள முன்மொழிவு தொடர்பில் தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதமத் மே அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்