தேசிய குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் இன்று 46 அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி பங்களாதேஸ் , பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதிக்கு முன்னர் இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கு அசாம் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில் 46 அமைப்புகள் சார்பில் இன்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. அதன்படி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன எனவும் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் முழு அடைப்பு போராட்டத்திற்கு மாநில பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு செல்ல வேண்டும் எனவும் முழு அடைப்புக்கு ஆதரவு அளிக்கும் வர்த்தக நிறுவனங்களின் உரிமங்கள் ரத்துச் செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது