Home இலங்கை “வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன்”

“வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன்”

by admin

முதலாவது வடமாகாணசபையின்  134 ஆவது அமர்வு வடமாகாண சபையின் பேரவைச் சபா மண்டபத்தில் முதலமைச்சர் உரை…
(23.10.2018 அன்று  காலை 09.30 மணியளவில்)

முதலாவது வடமாகாண சபையின் இறுதி அமர்வில் கலந்து கொண்டிருக்கும் கௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ மாகாண சபை உறுப்பினர்களே!

முதலில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் என்னைப் பதவியில் இருக்க வைத்த இறைவனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். அடுத்து அரசியல் அனுபவம் இல்லாதிருந்த எனக்கு அந்த அனுபவத்தைத் தந்த உங்கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அனுபவம் வீண் போகாது.  அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் 1987ஆம் ஆண்டு மாகாண சபை நிர்வாகம் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டு 26 வருடங்களின் பின்னரே 2013 ஆம் ஆண்டில் வடக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்த போது எமது மக்கள் கொடிய யுத்தம் ஒன்றின் ஊடான இன அழிப்பைச் சந்தித்து மிகவும் பலவீனமான நிலையில் இராணுவ நிர்வாகத்தின் கீழ் இருந்தார்கள். சொந்த பந்தங்களை இழந்து, சொத்துக்களை இழந்து, நிர்க்கதியான நிலையில் இராணுவ அடக்கு முறையின் கீழேயே எமது மக்கள் இருந்து வந்தார்கள். தடை முகாம்கள் ஆங்காங்கே காணப்பட்டன. நாம் கூட்டங்கள் கூடிய போது இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அங்கு வந்து மேடையில் அமர்ந்திருந்தார். இராணுவத்தினர் தேர்தல் நடவடிக்கைகளில் தாமும் மூக்கை நுழைத்திருந்தார்கள். வெளிப்படையாக சில வேட்பாளர்களுக்கு அனுசரணையும் வழங்கி இருந்தார்கள்.எனினும் இணைந்த வடக்குக் கிழக்கில் எம்மை நாமே ஆளும் சுய நிர்ணய அடிப்படையில் அதிகாரம் எமக்குப் பகிரப்பட வேண்டும் என்ற எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு முழுமையாக எம்மை நம்பி எமக்கு பெருவாரியாக வாக்களித்து என்னையும் முதலமைச்சர் ஆக்கினார்கள் எம் மக்கள்.

மக்கள் முன்வைத்து வாக்குகள் கேட்ட அந்த விஞ்ஞாபனத்தின் முக்கிய விடயமொன்றை இன்றைய இந்த இறுதி உரையில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

‘தமிழ் மக்கள் ஒரு தனிச்சிறப்பு மிக்க தேசிய இனமாவர். புவியியல் ரீதியாக பிணைக்கப்பட்டுள்ளதும் தமிழ்ப் பேசும் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்டதுமான வடக்கு, கிழக்கு மாகாணங்களே தமிழ்ப் பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாகும். தமிழ்ப் பேசும் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். சமஷ்டிக் கட்டமைப்பொன்றை அடிப்படையாகக் கொண்டு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எனும் ஓர் அலகில் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வானது காணி, சட்டம் – ஒழுங்கு, சுகாதாரம், கல்வி ஆகியன உள்ளிட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்தி வளங்கள் மற்றும் நிதி அதிகாரங்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்’.

இந்த வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காத வகையில் செயற்பட்டிருக்கின்றேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது. தமது துன்பங்களை ஒரு பொருட்டாகக் கருதாது பொருளாதார சலுகைகளுக்கும் அரை குறை தீர்வுகளுக்கும் இடமளிக்காமல் மக்கள் இந்த கோட்பாடுகளுக்காக வழங்கிய ஆணையே எனது அரசியல் மற்றும் பொருளாதார செயற்பாடுகளின் வழிகாட்டிகளாக இருந்து வந்திருக்கின்றன. பல சவால்கள், தடைகள் மற்றும் குழிபறிப்புக்களுக்கும் மத்தியில் என்னால் முடிந்தளவுக்கு இந்தப் பாதை வழியே பயணம் செய்ய முடிந்திருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் எமது மக்களின் துன்பங்களைத் துடைக்கக் கூடிய ஒரு நல்லெண்ண முயற்சியாக இராணுவ அடக்குமுறையின் கீழ் எம் மக்களை வைத்திருந்த அப்போதைய ஜனாதிபதி முன்பாக எனது பதவிப் பிரமாண உறுதி மொழியை எடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் பக்கமிருந்து எந்தவித நல்லெண்ண நடவடிக்கை சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை. 2014ம் ஆண்டு ஜனவரி 2ந் திகதி அப்போதைய ஜனாதிபதியைச் சந்தித்த போது எமது பல கோரிக்கைகளுக்கு சாதகமாகத் தலையை ஆட்டி விட்டு அவை எவற்றையும் அவர் நிறைவேற்றி வைக்கவில்லை. மாறாக எமது நிர்வாக செயற்பாடுகளுக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அப்போதிருந்த இராணுவ ஆளுநர் ஊடாக தடைகளே ஏற்படுத்தப்பட்டன. இருந்தபோதிலும் எமது மக்களின் துயர்களைத் துடைக்கும் பணிகளை அதிகாரமற்ற மாகாண சபை ஊடாக மட்டுப்படுத்தப்பட்ட வளங்களுடன் முடிந்தளவு செய்துவந்தோம்.

புதிய ஆட்சி மாற்றத்தினூடாக எமது செயற்பாடுகளைச் செய்வதற்கு இடமளிக்கப்படும் என்றும் எமக்கு ஒரு நன்மாற்றம் ஏற்படும் என்றும் நாங்கள் எண்ணியபோதும் அது நடைபெறவில்லை. ‘நல்லாட்சி’ என்ற பலகைக்குள் ஒழிந்து நின்று அணுகுமுறைகளில் மாற்றத்தைக் காட்டினரே தவிர நோக்கங்கள், செயற்பாடுகளில் புதிய அரசாங்கத்தினர் மாற்றத்தைக் காட்டவில்லை. முன்னைய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளையே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர். சில ஏக்கர் நிலங்களை இராணுவத்தினர் வசமிருந்து விடுவித்து சர்வதேச சமூகத்துக்குப் பறை சாற்றிவிட்டு பல ஏக்கர் காணிகளை அபகரிக்குங் கைங்கரியந் தான் இன்று நடைபெற்று வருகின்றது. அரச காணிகள் 60000 ஏக்கர்களுக்கு மேல் இராணுவத்தின் கைவசம் இருந்து வருகிறது. இராணுவ பாதுகாப்புடன் சிங்கள குடியேற்றங்கள் ஒருபுறம் நடைபெற, மறுபுறம் முழுமையாகத் தமிழர் வாழும் இடங்களில் விகாரைகள் அமைக்கப்பட்டு பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆளுநர் அடங்கலான அரச அலுவலர்கள் பலர் இவற்றிற்கு ஆதரவு அளித்து வருகின்றார்கள். தெற்கிலிருந்து முதலீட்டாளர்களை இங்கு கொண்டு வரத் துடியாய்த் துடிக்கின்றார்கள். எம் புலம்பெயர்ந்தோர் இங்கு வந்து முதலிடுவதை வெறுக்கின்றார்கள்.

நல்லாட்சி என்ற பெயர்ப்பலகை அரசாங்கத்துக்கு சர்வதேசரீதியாக இருந்த நெருக்குவாரங்களைக் களைவதற்கு பெரிதும் உதவியுள்ளது. சமஷ்டி என்ற பெயர்ப்பலகை தேவை இல்லை என்று கூறும் எம்மவர்கள் பெயர்பலகைகள் மிகமிக முக்கியமானவையும் அவசியமானவையுங் கூட என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள வேண்டும். எமக்குச் சாதகமாகப் பெயர்ப்பலகைகள் அமையாவிடில் எமது உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் ஒற்றையாட்சி என்ற கோட்டைத் தாண்டிப் பார்க்க மறுப்பார்கள் என்பதை நாங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

கடந்த 5 வருட காலத்தில் நாம் எமது மக்களுக்காக என்ன செய்துள்ளோம் என்பதைக் குறுகிய இந்த நேரத்தில் என்னால் விபரிப்பது கடினம். அதனால் நாம் ஆற்றிய முக்கியமான பணிகளை சுருக்கமாக விளக்கும் வகையில் தயாரித்துள்ள ஆவணமொன்றை கௌரவ அவைத்தலைவரிடம் சமர்ப்பிக்கிறேன். பிரதிகள் உங்கள் யாவருக்கும் இன்று கையளிக்கப்படும்.

2009ம் ஆண்டு நடைபெற்ற இனஅழிப்பு யுத்தத்தின் பின்னர் விரக்தி அடைந்து, ஆறுதல், அரவணைப்பு எதுவும் இன்றி எதிர்காலம் நிச்சயம் அற்ற நிலையில் எம் மக்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தென்பூட்டி, அரசியல் தெளிவூட்டுவது முக்கியமான பணியாக எனக்குத் தென்பட்டது. இதனைச் செய்ய வேண்டியவர்கள் வாளாதிருந்தது மனவருத்தத்தை ஊட்டியது. ஆகவே மக்களுக்குத் தெளிவூட்டி எமது உரித்துக்களை நாம் கேட்பது எமது உரிமை என்பதையும் எமது உரிமைகள் என்ன, எமது தீர்வுக்கான அடிப்படைகள் என்ன, இவற்றை நாம் விட்டுக்கொடுக்க முடியுமா என்பனவற்றைப் பற்றியும் மக்கள் மத்தியில் விதைப்பதற்கு நான் கணிசமான நேரத்தை செலவிட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. இன்று மக்கள் தாமாகவே இராணுவ முகாம்களுக்கு முன்பாக நின்று தமது காணிகளை மீட்பதற்கும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்கும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் தொடர் போராட்டங்களை நடத்துவதுடன் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவது தமது உரிமை என்று கூறி பெரும் எழுச்சியுடன் செயற்படுவதற்கும் தயங்காது முன்வந்துள்ளார்கள். எமக்கெல்லாம் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் வகையில் எமது மாணவ சமுதாயம் ஜனநாயக ரீதியிலான காத்திரமான பல போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்கள். மீண்டும் பயங்கரவாதம் என்ற பெயர்ப் பலகையைப் பாவிக்க அரசாங்கம் முனைந்துள்ள போதும் நாமும் எம் மக்களும் அதற்குப் பயந்து ஒடுங்கி விடாமல் முன்னேறி வருகின்றோம்.

எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக்கூறி சர்வதேச சமூகத்தினூடாக அதற்கான பரிகார நீதி பெற முடிந்தவரை குரல் எழுப்பியுள்ளேன். இறுதி யுத்தத்தில் நடைபெற்றது ஒரு இன அழிப்பே என்பதை நிறுவி எமது மாகாணசபையில் அதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை சபைக்கு அனுப்பிவைத்திருந்தோம். அதை ஏகமனதாக ஏற்று முன்னெடுப்பதற்கு கௌரவ அவைத்தலைவர் அவர்கள் உறுதுணையாக இருந்தார் என்பதை இங்கு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதனைக் கொண்டுவர எனக்கு ஊக்கியாய் இருந்தவர் கௌரவ உறுப்பினர் எம்.டி.சிவாஜிலிங்கம் என்பதையும் இங்கு நான் பதிவு செய்ய வேண்டும்.

எனினும் இதன் பின்னரே என்னைப் பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளும் எனக்கு எதிரான பொய்யான பிரச்சாரங்களும் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரு வேளை தமக்குக் கிடைக்கவிருந்த அமைச்சுப் பதவிகள் இந்தத் தீர்மான நிறைவேற்றத்தால் கிடைக்காமல் போனதன் ஆதங்கம் சிலரிடத்தில் இருந்து வேலை செய்ததோ நான் அறியேன். எனினும் எனக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது மக்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து குறிப்பாக இளஞ் சமூகம் அதனை முறியடித்தமையை நன்றியுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் நான் நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.

கட்டமைப்பு சார் இனவழிப்பின் ஓர் அங்கமாக அரசியல் ரீதியாகவும், சுற்றாடல் ரீதியாகவும் தீமை பயக்கும் பல திட்டங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் சாதாரண மக்கள் பகுத்தறிந்து கொள்ள முடியாதவகையில் அரசாங்கம் நிறைவேற்ற முற்பட்டவேளையில் எமது துறைசார் நிபுணர்களின் உதவியுடன் நாம் தடுத்துள்ளோம். பல திட்டங்களை மக்களே தமது ஆர்ப்பாட்ட நடவடிக்கைகள் மூலம் தடுத்திருக்கின்றார்கள். உதாரணத்திற்கு 37 அடுக்கு சுற்றுலா உணவகமொன்றுக்கு தீவகப் பகுதிகளில் மத்திய அரசின் அனுசரணையுடன், உரிய மாகாண அறிக்கைகளையும் அனுமதியையும் பெறாது அத்திவாரம் போட முனைந்த போது அதனை மக்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

நாளையுடன் கலையும் எமது மாகாண சபையின் நிர்வாகம் ஆளுநர் கையில் சென்றபின்னர் இவ்வாறான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் பெரும் ஆபத்து எம்மை நோக்கி இருக்கின்றது. இவற்றையெல்லாந் தடுக்க எமது நிர்வாக உத்தியோகத்தர்கள் அந்தந்த துறைசார் நிபுணர்களின் உதவியுடன் இனம்கண்டு, விழிப்புடனும் கடமை உணர்வுடனும் செயற்பட முன்வரவேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். குழந்தைகளுக்கு பொம்மைகளைக் காட்டி அழவைக்காது ஆறுதல்ப் படுத்துவது போல் எமது உரிமைகளை எமக்கு வழங்காது பொருளாதார அபிவிருத்தி என்ற பொம்மையினைக் காட்டி எம்மை நிரந்தரமாகத் தமது அதிகாரத்தின் கீழ் விழவைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை முன்கூட்டியே உங்களுக்குக் கூறி வைக்கின்றேன். பொம்மைகளில் மனம் மயங்கி உரிமைகளைப் பெறாது கோட்டை விடப் போகின்றீர்கள் என்ற கருத்தை உங்களுக்குக் கூறி வைக்கின்றேன். தெற்கிலிருந்து பாரிய முதலீடுகளைப் பெற்று விட்டு எமது உரிமைகளைத் தியாகஞ் செய்ய எம் மக்கள் ஆயத்தமாக இருக்கின்றார்களா என்பதை நாம் எம் மக்களிடமே கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அப்போதைய அரசாங்கம் தருவதாகக் கூறிய அனுசரணைகளைப் புறக்கணித்து விட்;டே எம்மை எம் மக்கள் 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ந் திகதியன்று தேர்ந்தெடுத்திருந்தார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.

பாரிய யுத்த அழிவை சந்தித்த மாகாணம் என்றவகையில் எமக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அதிகம் தேவையிருந்தும் மத்திய அரசினால் குறித்தொதுக்கப்படும் குறைந்தபட்ச நிதியும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்பதை உங்களுக்கு நினைவுபடுத்துகின்றேன். அவ்வாறு எமக்கு வழங்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூட மத்திய அரசுக்குத் திரும்பிப் போகாதவண்ணம் நாம் திட்டங்களைச் செயற்படுத்தியிருக்கின்றோம். ஆனால் எம் மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திட்டங்கள் நடைமுறைபடுத்தப்படாமல் பெருமளவு நிதி மீண்டும் மத்திக்கு திரும்பிச் செல்வதாக பொய்யான பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன அழிப்பு யுத்தத்தினூடாக எமது மக்களின் பொருளாதார உட்கட்டுமானங்களை நிர்மூலம் செய்து அவர்களின் வாழ்வாதாரக் கட்டமைப்புக்களை இல்லாமல் செய்த தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் அவற்றை மீள கட்டியெழுப்புவதற்குப் போதுமான நிதியை வழங்கவில்லை என்பதே உண்மை. ஆனால் எம்முடைய காலம் முடிவடையப் போகிறது என்பதை அறிந்து கொண்ட அரசாங்கம் 2019ம் ஆண்டுப் பாதீட்டில் 4000 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையை அங்கீகரித்துள்ளதாக அறிய வருகின்றது. இந்த ஐந்து வருடங்களிலும் இவ்வாறான தொகை எமக்கு ஒதுக்கப்படவில்லை.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடானது முன்னர் யுத்தம் நடக்கும்போது ஒதுக்கப்பட்ட நிதியின் பன்மடங்காக அதிகரித்துள்ளது. 2018ல் 290 பில்லியனாக இருந்த பாதுகாப்புக்கான நிதி 2019க்கான உத்தேச வரவு செலவு திட்டத்தில் சுமார் 306 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் யுத்தம் உக்கிரமாக நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு 175 பில்லியன்களாகவே இருந்தது. அதேவேளை, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சுக்கு 2018 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 11 பில்லியன்களே. இந்த சொற்ப நிதியில் இருந்து கணிசமான நிதியை வடக்கில் பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறுவதற்காக புனர்வாழ்வு அமைச்சு வழங்கிய விசித்திரமான நிலைமை உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்தநிலையில், வடக்கு ஆளுநர் புலம் பெயர் தமிழ் மக்கள் வாழும் நாடுகளுக்கு விஜயம் செய்து வடக்கின் அபிவிருத்தியை முன்னெடுக்க முதலீடுகளைச் செய்யுமாறும் ஒத்தாசை புரியுமாறும் அங்குள்ள எமது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே கருத்தை நான் அதிமேதகு ஜனாதிபதியிடம் கூறி உங்களுக்கு வெளிநாட்டு செலாவணியை எம் புலம் பெயர் மக்கள் பெற்றுத் தருவார்கள், முதலமைச்சர் நிதியத்தை நிறுவ உதவி தாருங்கள் என்று கூறிய போது ‘சரி’ என்று கூறிவிட்டு இது வரையில் அதற்கான அனுமதி தரப்படவில்லை. தமது கட்டுப்பாட்டின் கீழ் எமது வளர்ச்சி அமைய வேண்டும் என்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாய் உள்ளார்கள். எம்மவர் சிலர் ‘அதற்கென்ன?’ என்கின்றார்கள். வரப்போகும் இன மறைவு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல போல் தெரிகின்றது. ஆளுநர் ஆட்சியில் அறுவைச் சிகிச்சை வெற்றியளிக்கும்; ஆனால் நோயாளி இருந்த இடந் தெரியாமல் மறைந்து விடுவான்.

உலகில் யுத்தம் நடை பெற்ற நாடுகளில் யுத்தம் முடிவடைந்த பின்னர் பாதுகாப்புச் செலவினம் குறைவடைந்து மீள்கட்டுமானம் மற்றும் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுவதே வழமை. ஆனால், யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையிலும் இலங்கையில் இந்த விடயம் எதிர்மாறான நிலையில் காணப்படுகின்றது. இராணுவ ரீதியான பாரிய ஒரு நிகழ்ச்சித்திட்டம் அரங்கேற்றப்பட இருப்பதையே இந்தப் புள்ளிவிபரங்கள் காட்டி நிற்கின்றன. அண்மையில் ஆவாவை அழித்திட ‘ஆமி’ தயார் என்றார் இராணுவத்தளபதி. நல்லவேளை பொலிசார் தாம் பார்த்துக் கொள்வதாகக் கூறி தளபதியின் வாயை அடைத்தனர். ஆனால் இந்த உள்ளீடல் தொடரும். மிக நுட்பமான திட்டமிடலுடன் தொடர்ந்தும் தமிழ் மக்களை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வைத்திருப்பதற்கும் இராணுவத்தினரை இங்கு நிலையாக வைத்திருந்து சிங்கள மயமாக்கலை மேற்கொள்வதற்குமான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதை எதிர்பார்க்கலாம். தற்போது பல இடங்களிலும் நிரந்தர இராணுவ குடியேற்றங்களுக்கான கட்டடவேலைகள் நடைபெற்றுவருவதைப் பார்க்கின்றோம். இராணுவம் கையேற்புக்காகக் கேட்ட காணிகள் எவற்றையும் வழங்க நான் இதுவரையில் அனுமதிக்கவில்லை. தாம் செய்வது கரவான செயல் என்பதைத் தெரிந்தோ என்னவோ நான் மறுத்த விண்ணப்பங்கள் எவற்றைப் பற்றியும் இராணுவம் என்னிடம் மீளாய்வு செய்யுமாறு கோரவில்லை.

காணி கையேற்புச் சட்டத்தின் கீழ் பொது நன்மைக்காகவே காணிகளைச் சுவீகரிக்க முடியும். இராணுவம் வடகிழக்கில் தொடர்ந்திருக்கக் காணிகள் கேட்பது எமது பொதுமக்களின் நன்மைக்காக அன்று. பெரும்பான்மையோரின் மேலாதிக்கத்தை உறுதி செய்யவே. ஆகவே இனி ஆளுநர் தேவைக்கதிகமான அனுமதிகளை வழங்குவார் என்று எதிர்பார்க்கலாம். வடக்கில் இராணுவ பிரசன்னத்தை கடுமையாக எதிர்த்து வரும் எமது தமிழ் மக்கள், அவர்களுக்கு எதிராகத் தொடர்போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அண்மையில் இங்கிலாந்தின் ஒஸ்ப்போர்ட் பல்கலைக்கழகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையில் ‘தமிழ் மக்கள் இராணுவத்தின் தொடர் இருப்பை விரும்புவதாக’ அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறியமை நீண்ட காலத்துக்குத் தமிழ் மக்களை இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருப்பதற்கு மத்திய அரசாங்கம் திட்டமிடுவதையே எடுத்துக் காட்டுகின்றது. இந்தியாவில் உண்மை கூறிய என்னைப் பொய்யன் என்று கூறிய கௌரவ இரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தில் அப்பட்டமான பொய்யை உரைத்துள்ளார்.

ஆனால், எமது மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தெரிவான எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த விடயங்களை ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்க்காமல், வருடாவருடம் வரவுசெலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து எமக்கு எதிரான அரசாங்க செயற்பாடுகளுக்கு ‘நல்லாட்சி’ என்ற சாயம் பூசி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றார்கள். இது வருத்தத்திற்குரியது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் சுயசார்பு பொருளாதார விருத்தியை அடையும் பொருட்டு எமது புலம்பெயர் உறவுகளின் துணையுடன் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க, முதலமைச்சர் நிதியத்தை அமைக்கும் முயற்சியாக நியதிச்சட்டம் உருவாக்கப்பட்டு அனுமதிக்காக அனுப்பி வருடங்கள் பல காத்திருந்துவிட்டோம். ஆனால் அனுமதி தரப்படவில்லை. இதையே சற்று முன்னரும் குறிப்பிட்டேன். இந்த நிதியம் உருவாக்கப்பட்டால் இலங்கைக்குள் பெருமளவில் வெளிநாட்டு நிதி கொண்டுவரப்படும் வாய்ப்பு ஏற்படும் என்பது தெரிந்தும் தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியாக பெரு நன்மைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக ‘எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை, உனக்கு இரண்டு கண்ணும் இருக்கக் கூடாது’ என்ற பாணியில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டு வருகின்றது. இதில் தேசிய கட்சிகளுக்குள் ஒற்றுமை இருந்து வருகின்றது என்பது வெளிப்படை. இவ்வாறான தேசியக் கட்சிகள்தான் தற்போது வட கிழக்கில் காலூன்றப் பார்க்கின்றார்கள். ஆளுநர் வருகையையும் அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

இவற்றிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது, நாம் எமது பொருளாதார அபிவிருத்திக்கு மத்திய அரசைத் தொடர்ந்தும் சார்ந்து இருக்கவேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். நான் முன்னர் குறிப்பிட்டது போல்; இந்த நிதியம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இது பற்றி பேசிக் கடிதங்களையும் அனுப்பியுள்ளேன். அவற்றுள் ஒரு கடிதத்தை இந்த சபையில் சமர்ப்பிக்க விரும்புகின்றேன்; கையளிக்கின்றேன். இன்று சமர்ப்பிக்காவிட்டால் பின்னர் சமர்ப்பிக்க முடியுமோ நான் அறியேன்.

எந்த இராணுவத்தை வெளியேற்றவேண்டும் என்று நான் குரல் கொடுத்து வருகின்றேனோ, எந்த இராணுவத்துக்கு எதிராக மக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்களோ அதே இராணுவத்தையும் மற்றைய படையணியிரையும் உள்வாங்கி வடமாகாண சபையைப் புறக்கணித்து எனக்கு மட்டும் சந்தர்ப்பம் அளித்து வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்மூலம் இராணுவம் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபடுகிறது என்று காட்டி அவர்களின் பிரசன்னத்தை நியாயப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு துணைபோகக்கூடாது என்ற காரணத்தினாலும் சர்வதேச சமூகத்தை அபிவிருத்தி என்ற போர்வையில் ஏமாற்றி அரசியல் தீர்வைத் தள்ளி வைக்கும் நோக்கத்துக்கு இடமளிக்கக்கூடாது என்பதற்காகவுமே இந்தக் கண்துடைப்பு செயலணியில் இணைந்துகொள்ளாமல் புறக்கணித்தேன். அரசாங்கம் அடுத்த மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் மேலும் கால அவசாசம் கேட்கவே காய்களை நகர்த்தி வருகின்றது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வட மாகாண சபையினூடாக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் செய்திருக்கலாம். ஆனால் அவற்றுக்கான போதிய நிதியைத் தராமலும் அதிகார வரம்புகளை ஏற்படுத்தியும் அரசாங்கம் பொருளாதார விருத்தியைத் தடுத்து வந்துள்ள பின்னணியில் தற்போது வட மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் தறுவாயில் அபிவிருத்திக்கான இந்த ஜனாதிபதி செயலணி குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காலமும் திட்டமிட்டு பின்போடப்பட்டு வந்த திட்டங்களை இந்த செயலணி மூலம் மேற்கொள்வது எதிர்வரும் மனித உரிமைகள் சபையில் சாதகமான ஒரு நிலைமையினை ஏற்படுத்துவதற்காகும். இப்பொழுது ஆளுநர் அரசாங்கத்திற்கு அனுசரணை வழங்கவுள்ளார். வட மாகாண சபையின் எமது தலைமைத்துவத்தை மலினப்படுத்தி எமது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே எமக்கு எதிரான பரப்புரைகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரசாங்கத்தின் முகவர்களினாலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

மிகையான அதிகாரத்துடன் மத்திய அரசின் முகவர்களாக கடந்த 5 ஆண்டுகளில் பணியாற்றிய ஆளுநர்களே வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு குந்தகமாக இருந்து வந்திருக்கின்றார்கள். எப்போது வட மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் அதன் முழுமையான அதிகாரம் தனது கைக்கு வரும் என்று காத்திருந்தவர் போல தற்போதைய ஆளுநரின் அண்மைய செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. நான் முன்னர் எச்சரித்ததுபோல இனிவரும் காலம் ஆபத்தானது. எமது மக்களை பல்வேறு வழிகளிலும் ஏமாற்றும் நடவடிக்கைகளும் பிழையாக வழிநடத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படலாம் என்று அஞ்சுகின்றேன். பெரும்பான்மையோர் மேலாதிக்கத்தைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். எமது மக்கள் விழிப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்கவேண்டும். வட மாகாண சபைக்கான தேர்தலை காலவரையறை இன்றி பிற்போடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். இதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது.

ஒரு நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றபின் அரசியலுக்கு வந்தவன் நான். எவ்வௌற்றிற்காகப் பாடுபடுவேன் என்று எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கு வாக்குக் கொடுத்து வெற்றிபெற்றேனோ அந்த உறுதி மொழிக்கு கட்டுப்பட்டவன் நான். தமிழ் தேசியக் கோட்பாடுகளுக்காக பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்த வரலாறுகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டவன் நான். பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைக் கண்டவன் நான். ஆகவே ‘இதுதான் யதார்த்தம்; இதற்கு மேல் எங்களுக்குக் கிடைக்காது’ என்று கூறி எமது மக்களுக்கு பொய் கூறி ஏமாற்ற எனக்குத் தெரியாது. இந்த அடிப்படையில்தான் எனது செயற்பாடுகளுக்கும் எனது கட்சியின் தலைமைகளின் செயற்பாடுகளுக்கும் இடையே இடைவெளி அதிகரித்தது. இதனை எனது மக்கள் நன்கு அறிவர். எமக்கு இடையிலான இந்த விரிசல்களுக்காக என்னைப் பழிவாங்க வேண்டும் என்று செயற்பட்டு எமது மக்களின் தலைவிதியுடன் எவரும் விளையாடக்கூடாது. இது தொடர்பில் சில விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்:

1. முதலமைச்சர் நிதியத்துக்கான நியதிச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் எமது தலைவர்கள் வலியுறுத்தத் தவறியதுடன் எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. நாம் தான் இந்த அரசைக் கொண்டுவந்தோம். எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் பல முக்கிய பதவிகளையும் வைத்துள்ளோம். ஆனாலும் கூட முதலமைச்சர் நிதியத்தை உருவாக்குமாறு வலியுறுத்த எம்மால் முடியவில்லை.

2. மக்களால் அங்கீகரிக்கப்பட்ட வட மாகாணசபை ஓர் அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்திருந்தும் அதைக் கிஞ்சித்தும் சீர்தூக்கிப் பார்க்கவில்லை அதிகாரத்தில் இருந்தோர். குறைந்தபட்சம் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கட்சிகள் சமர்பித்த யோசனைகள் என்ற பின்னிணைப்புடன் கூட எமது முன் வரைவுகளை எவரும் இணைக்க முயன்றிருக்கவில்லை.

3. வடகிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டங்களில் பங்குபற்றாமைக்கு நான் முன்னர் கூறிய காரணங்களைக் காட்டி அதைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் எனது முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் உள்வாங்கியிராத இந்த செயலணியில் நான் அதனைப் புறக்கணித்ததன் பின்னரே எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் நான் சுட்டிக்காட்டிய காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி சிந்திக்காது அதற்கொரு அங்கீகாரத்தை வழங்க எமது தலைமைகள் இன்று முற்பட்டுள்ளன. ஆகக்குறைந்தது இந்த செயலணியில் இராணுவத்தினரின் சமமான பங்குபற்றுதல் பொருத்தமற்றது என்று கூட அவர்களால் நிபந்தனை இடக் கூட முடியவில்லை.

4. வட மாகாணசபையில் நாம் ஆட்சியமைத்த கடந்த 5 வருடங்களில் எமது கட்சித் தலைமை எம்மை அழைத்து எமது செயற்திட்டங்கள் என்ன, எத்தகைய பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கின்றோம், அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றீர்கள், பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இவற்றுக்காக ஏதேனும் செய்ய முடியுமா என்றெல்லாம் கேட்க எத்தனிக்கவில்லை என்பது மனவருத்தத்தை தருகின்றது. எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாத என்னை அரசியலுக்கு அழைத்து வந்து ‘நீந்தப் பழகிக் கொள்’ என்று நீரில் தள்ளிவிட்டதே எனக்கு நேர்ந்த கதி.

5. எந்த ஒரு புதிய அரசும் தனது ஆட்சியின் முதல் இரு வருடங்களுக்குள்ளாகவே தேச நலன் சார்ந்த முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும். ஏனெனில் மக்களின் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகவில்லையெனில் அவ்வரசு மீதான மக்களின் வெறுப்பு இத்தகைய முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படுவதைப் பாதித்துவிடும். இன்றைய மத்திய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று கூறிக் காலம் தாழ்த்திக் கொண்டுவந்துள்ள அரசியலமைப்பு மாற்றம், உருப்படியான எந்த முன்னேற்றமும் இன்றி அரசாங்கத்தின் ஆட்சி இன்னமும் 1 1ஃ2 வருடங்களில் காலாவதியாகப்போகும் நிலையில் ஆமை வேகத்தில் நகர்ந்துவருகிறது. இந்த அரசியலமைப்பு திருத்த நடவடிக்கையானது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஆலோசனை இன்றி அதன் எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பங்குபற்றுதல் இல்லாமல் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வட மாகாண சபையின் பிரதிநிதித்துவம் இன்றி, இரு தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்களையே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிபலிப்புக்களாக ஜனநாயக விரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

அரசியலமைப்பு மாற்றத்தை இனப்பிரச்சனைக்கான தீர்வாக ஏற்றுக்கொண்டு அதில் கலந்துகொண்டதன் மூலம் 70 வருடகால தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்கள் மூலம் கட்டி எழுப்பப்பட்ட ‘சிங்கள- தமிழ்’ தரப்புக்களின் பேச்சுவார்த்தை மூலமாகப் ‘பேரம் பேசும்’ நிலைமை இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி என்பவற்றைக் கைவிட்டு ஒற்றையாட்சி முறையை எமது மக்களின் எந்த அங்கீகாரமும் இன்றி ஏற்றுக்கொண்டுள்ளார்கள் எமது தலைவர்கள். பௌத்தத்திற்கு முதலிடம் என்பதையும் இந்த அரசியலமைப்பு உத்தேசத் திருத்தத்தில் ஏற்றுக்கொண்டதன் மூலம் கட்டமைப்பு ரீதியானதும், கலாசார ரீதியானதுமான தொடர் இன அழிப்புக்கான வழியை ஏற்படுத்தியுள்ளார்கள் எம்மவர்கள். இதனையா நாம் ‘சாணக்கிய அரசியல்’ என்று ஏற்றுக்கொள்வது? எமக்கான இலக்கைத் தாமே நிர்ணயித்துவிட்டா தீர்வு முயற்சிகளில் இவர்கள் பங்குபற்றியுள்ளார்கள்? எத்தனை துறைசார் புத்திஜீவிகளின் ஆலோசனைகளை இதற்காக பெற்றிருந்திருக்கின்றார்கள் எமது தலைவர்கள்? மக்களின் எண்ணங்களும் மனோநிலையும் எமது தலைமைகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இத்தகைய ஒரு ஆபத்தான நிலைமையை சீர்குலைக்கக்கூடாது என்பதற்காகவா இப்போது ஒற்றுமையை வலியுறுத்துகின்றார்கள்? எமது இனத்தை அழிப்பதற்கா அல்லது பாதுகாப்பதற்கா ஒற்றுமை வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கவேண்டிய காலம் வந்துவிட்டது. எமது இனத்தை அழிந்து போக விடும் ஆலோசனைகளை ஆமோதிக்கும் எம்மவர் அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் எம்மை அணி சேருமாறு கோருவதும் ஒற்றுமையை வலியுறுத்துவதும் விந்தையாக இருக்கின்றது. எமது அடிப்படைக் கொள்கைகளை அடையாளங்கண்டு அவற்றின் அடிப்படையில் ஒற்றுமை பிறந்தால் அன்றி தவறான அடிப்படைகளில் ஏற்படும் ஒற்றுமை ஆபத்தாக முடியும்.

இன்று தமிழ் மக்களுக்கு முன்பாக ஒரு வேண்டுகோளை நான் முன் வைக்கின்றேன். அதாவது தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று முணுமுணுக்கும் முக்கியஸ்தர்களின் முனகல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

சர்வதேச சமூகம் மற்றும் உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்களின் உதவியுடனும் நாம் எமது செயற்பாடுகளை நிறுவனமயப்படுத்தப்பட்ட அரசியல், பொருளாதார நடவடிக்கைகளினூடாக இனிமேல் முன்னெடுக்கவேண்டும். போர் குற்ற விசாரணை மற்றும் உண்மையை கண்டறியும் பொறிமுறைகளை ஏற்படுத்த நாம் பாடுபட்டு முயன்று அவற்றுக்கூடாக, தொடர்ந்தும் இருளில் வைக்கப்பட்டுள்ள சிங்கள மக்களுக்கு உண்மைகளை புரியவைத்து எமக்கான தீர்வை வென்றெடுக்க நாம் உழைக்கவேண்டும். முடியாதென்று எதுவுமில்லை. முயன்றால் முடியும்!

என்னினிய சக உறுப்பினர்களே! நான் மாகாணசபை அரங்கத்தினுள் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த போது அவைத்தலைவர் உள்ளடங்கிய உங்கள் ஒவ்வொருவர் மீதும் எனக்கிருந்த அன்பை நான் இன்றும் பறி கொடுத்து விடவில்லை. மத்தியில் வந்த உறுப்பினர்கள் மீதும் என் அன்பு நிலைத்தே இருக்கின்றது. நான் தொடர்ந்தும் யாழ் மண்ணிலேயே குடியிருக்கவுள்ளேன். என்னை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து சந்திக்கலாம். சுற்றி நடப்பனவற்றை உங்களுடு அறிந்து கொள்ள எப்போதும் ஆவலாய் இருப்பேன். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இலக்குகளை, ஆசைகளை, அபிலாஷைகளை அடைய இறைவன் அருள் புரிவானாக! அன்புடன் உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன்.
நன்றி
வணக்கம்

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More