இறுதி யுத்தத்தின் நிறைவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதம் முடிவடைந்து விட்டது என்றே அனைவரும் கருதினார்கள். எனினும் புலிகள் அமைப்பில் யுத்தத்திற்கு தலைமை வகித்த பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகள் அமைப்பின் அரசியல் தலைமைத்துவம், சர்வதேச தலைமைத்துவம் என்பன தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.
எனவே யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, உரையாற்றிய விகாரந்தெனியே நந்த தேரர், விடுதலைப் புலிகள் அமைப்பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனும் பரிந்துரை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனும் கோரிக்கைக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது நாட்டுப் பாராளுமன்றத்திலேயே உள்ளனர் எனத்தெரிவித்துள்ளார்.