அரசியல் கட்சிகள், சமூக மற்றும் சூழல் இயக்கங்கள் கோரிக்கை
சென்ற மாத இறுதியில் கூடங்குளத்திலுள்ள இரண்டாவது அணு உலையின் பராமரிப்புப் பணிகள் முடிவுற்று, மறுபடியும் யை துவக்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் தமிழக மின் துறை அமைச்சர் கூடங்குளத்தில் இருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட வரவில்லை என்று அறிவித்திருந்தார். செப்டம்பர் இறுதியில் துவங்கிய உற்பத்தி 5 தினங்களுக்கு முன்னர் (ஆரம்பித்த சுமார் 15 நாட்களுக்குள்) பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் நேற்று காலை முதல் மின்னுற்பத்தி துவங்கிவிட்டதாக அறிவித்துள்ளனர்.
மேற்சொன்னவை எதுவும் புதிதல்ல. கூடங்குளத்தில் இவ்வாறு நிகழ்வது தொடர்கதைதான். தரம்குறைந்த உதிரிபாகங்கள் ரஷியாவிலிருந்து வந்துள்ளன என்று கூடங்குளத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சுட்டிக்காட்டப்பட்டது. அந்த அணு உலைகளால் மின்னுற்பத்தியை தொடர்ந்து நடத்தமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள், கூடங்குளத்தில் மின்னுற்பத்தியை தொடர்ந்து நடத்துவது ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதில் போய் முடியும் என்று சொல்லியிருக்கிறார்.
ஏற்கனவே கூடங்குளம் அணு உலைகள் உலகத்தில் எங்குமே இல்லாத வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 50 முறை பழுடைந்து நின்றுள்ளன. ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் போதாது என்று இப்போது “அணுக்கழிவுகளை” கையாள தொழில்நுட்பம் இல்லை என்று தேசிய அணு மின் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகள் “தேசத்தின் சொத்து” என்றும் கழிவுகளை மறுசுழற்சி மையங்களுக்கு கொண்டு சென்று மறுசுழற்சி செய்து அணுக்கழிவு மேலாண்மை மையங்களில் பாதுகாக்கமுடியும் என்று சொல்லித்தான் கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடைபெற்ற சமயங்களில் தேசிய அணு மின் கழகமும் மத்திய அரசும் சொல்லிவந்தன.
இந்தியாவில் உள்ள இரண்டு அணுக்கழிவு மறுசுழற்சி மையங்களும் “கனநீர் உலைகளில்” (heavy water reactors) இருந்துவரக்கூடிய அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் கொண்டவை. கூடங்குளம் போன்ற உலைகளிலிருந்து உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை மேற்சொன்ன மையங்களில் மேலாண்மை செய்யமுடியாது.
புகுஷிமா அணு உலை விபத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் அதன் கழிவுகள் அங்கேயே வைக்கப்பட்டதுதான். இப்போது கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை மையம் கூடங்குளம் வளாகத்திற்குள்தான் அமைக்கப்படும் என்றும் ஆனாலும் அதற்குரிய தொழில்நுட்பம் தங்களிடம் இல்லை என்றும் அதனால் மேலும் நான்காண்டுகள் கால அவகாசம் கேட்டுள்ளது தேசிய அணு மின் கழகம். இதற்கு முன்னர் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், பல்வேறு கடிதங்கள் மூலமாக அணுக் கழிவு மையங்களை அமைக்க வலியுறுத்தியுள்ளது.
கூடங்குளத்திலுள்ள அணு உலைகளுக்குள் மேலும் மேலும் அணுக்கழிவுகளை சேர்த்து வைப்பது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியக்கூடும். அதனால்தான் கூடங்குளம் அணு உலை கழிவுகளை கையாளுவதற்கான தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகிறது. கூடங்குளம் அணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய தொழில்நுட்பம் இந்தியாவில் கிடையாது. அதனால்தான் கழிவுகளை பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்கிற தேவையும் வருகிறது.
இந்த பின்னணியில் கீழ்கண்ட கோரிக்கைகளை வைக்கிறோம்:
1. இதுவரை உலகத்தில் இல்லாத வகையில் 50 முறைக்கு மேல் பழுடைந்து நின்றுள்ள 1 மற்றும் 2வது உலைகளில் சுதந்திரமான குழுவை கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும். அதுவரை மின்னுற்பத்தியை நிறுத்திவைக்க வேண்டும்
2. அணுக்கழிவு மேலாண்மை மையம் கூடங்குளம் வளாகத்திற்கு வெளியே அமைக்கும் வரை, முதல் இரண்டு அலகுகளில் உற்பத்தியை மேற்கொள்ளக்கூடாது
3. 3,4,5,6 என்று கூடங்குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் விரிவாக்க பணிகளை கைவிடவேண்டும்.
4. மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்
தொல்.திருமாவளவன் – (வி.சி.க)
தி.வேல்முருகன் – (த.வா.க)
ஜவாஹிருல்லா -(ம.ம.க),
மல்லை சத்யா – (ம.தி.மு.க)
தெஹெலான் –
பீமா ராவ் – (சி.பி.எம்)
பாகவி – (எஸ்.டி.பி.ஐ)
வீரபாண்டியன் (சி,பி,ஐ),
மருத்துவர் எழிலன்