மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் குறித்து விளக்கம் கேட்ட சென்னையைச் சேர்ந்த இரண்டு சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள சிட்லபாக்கம் சேது நாராயணன் தெருவில், கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் அவசர கதியில் நடைபெறுவதாகவும், இந்தப் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் பாலசந்தர், குமார் ஆகியோர் அங்கிருந்த உதவிப் பொறியாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் இப்பணி ஆணைக்கான நகலைத் தருமாறு பொறியாளரிடம் கேட்டதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பாலசந்தர், குமார் இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்தனர்.
இதனைத் தொடந்து அரச அதிகாரியைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, கூட்டுச் சதி உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது