அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மாகாண சபைகளின் நிர்வாகத்தை உத்தியோகபூர்வ அதிகாரிகளின் கீழ் கொண்டுவருதல், ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு சமமானதாக காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் பலவற்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, கலைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான மாகாண சபைகளின் செயற்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளை இழந்து, அதிகாரத்துவத்துக்குள் சரணடையச் செய்வது ஏற்றுக்கொள்ளமுடியாத ஜனநாயக விரோதச் செயற்பாடாகும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடனான அந்த விசேட கடிதம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, அரசாங்கம் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்சிகளுக்கு நேற்று முன்தினம் (22) அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதமர் தலைமையிலான எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு, தற்போதும் செயலில் உள்ளது என்பதனால், அந்தக் குழு, மீளாய்வு அறிக்கையை ஒருவாரத்துக்குள் கொடுக்கவேண்டியுள்ளது. அந்தக் காலம் நிறைவடைந்ததன் பின்னர், அதாவது, நவம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து மாகாண சபைகள் தேர்தல் நடத்துவதற்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.