தென்கிழக்குப் பல்கலைக்கழகம், இன்று புதன்கிழமை தொடக்கம், மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாகவும், பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டடத்தை கடந்த இரண்டு வார காலமாக, அந்த பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆக்கிரமித்துள்ளமையின் காரணமாகவே, மறு அறிவித்தல் வரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு, நிருவாகம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழகத்திலும், அங்குள்ள விடுதிகளிலும் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும், இன்று மாலை 4.00 மணிக்கு முன்னர், அங்கிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவினையும் மீறி, பல்கலைக்கழகத்தினுள் தங்கியிருப்பது சட்டவிரோதமாகக் கருதப்படும் எனவும், தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகம் எச்சரித்துள்ளது.