பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பேரணியாக செல்கின்றது. கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலைமுதல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், பின்னர் பேரணியாக செல்கிறது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டதோடு, தண்ணீர் தாக்குதல் நடத்தும் வாகனங்களும் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1000 ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று 24-10-2018 காலை பத்து மணிக்கு இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
எங்கள் குருதி அட்டைக்கு எங்கள் உழைப்பு அரசுக்கு, அதிகரித்த விலையிலும் அரைகுறை சம்பளமா?, ஏழை மக்களை ஒடுக்காதே அரசே, வழங்கு வழங்கு ஆ யிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கு, சுரண்டாதே சுரண்டாதே எங்களது உழைப்பை சுரண்டாதே, அரசே நீ என்ன தோட்டத் முதலாளியின் தூதுவரா? சலுகைகளை கேட்கவில்லை உழைப்புக்கேற்ற ஊதியத்தையே கேட்கிறோம் போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர். குறித்த இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மற்றும் தமிழரசு கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் மாணவர்களின் போராட்டம்…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று 24.10.18) நடைபெற்றது. இதன்போது, “நாட்டின் முதுகெலும்பை அறுக்காதே, அடிப்படை சம்பளத்தினை 1000 ரூபாயாக மாற்று, மாற்றமுறும் மலையகத்திற்கு நமக்காக நாம், ஒன்றிணைந்து போராடுவோம் நாளை நமதே” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
நாட்டின் பொருளாதாரத்திற்கான முதுகெலும்பாகவுள்ள தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தேயிலைக்கு உரமாக்கப்பட்டே வருவதாகவும் அவர்களின் வாழ்க்கை தொடர்பில் யாரும் அக்கறை கொள்வதில்லையெனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன் தொடர்ச்சியாக தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமானால் நாடளாவிய ரீதியில் ஆசிரிய மாணவர்களை இணைத்து போராடுவோம் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவாக திருகோணமலையிலும் போராட்டம்..
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவாக திருகோணமலையிலும் இன்று (24.10.18) இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட அகரம் மக்கள் மய்யத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட் குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தினைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இவ் ஆர்ப்பாட்டம் அநுராதபுர சந்தி சந்தைக் கட்டடத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1000 ரூபாயாக உயர்த்துமாறும், கூட்டு ஒப்பந்தம் இரத்துச்செய்யப்பட்டு சம்பள நிர்ணய சபை ஊடாக குறித்த பிரச்சினைக்கான தீர்வினை அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஹற்றனில் ஹர்த்தாலுடன் ஆர்ப்பாட்டப் பேரணி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை உரிய வகையில் வழங்க வேண்டும் எனக்கோரி ஹற்றனில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதுடன் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் இடம்பெற்றது. ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று (24.10.18) காலை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது. இப்பேரணி ஹற்றன் பேருந்து தரிப்பிடத்திலிருந்து மல்லியப்பு வரை சென்று மீண்டும் மணிகூட்டு கோபுரம் முன்பு முடிவடைந்தது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பதாதைகளை ஏந்தியவாறும், கறுப்பு கொடி பிடித்தும் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்.