அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள பில் கிளிண்டன் – ஹிலரி கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று இன்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய இதுபோன்ற பொருள் ஒன்று முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூ யோர்க் புறநகரிலுள்ள தாராள நன்கொடையாளரும், நிதியாளருமான ஜோர்ஜ் சோரோஸின் வீட்டிற்கு குண்டு அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
பில் கிளிண்டன் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி. ஹிலரி கிளிண்டன் 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் என்பதுடன் ஒபாமாவின் ஆட்சியில் வெளியுறுவுச் செயலராக இருந்தவர்.
நியூயோர்க் நகரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் சாப்பாகுவாவில் அமைந்துள்ள கிளிண்டனின் வீட்டில் கடிதங்களை ஸ்கான் செய்யும்போது தொழில்நுட்பவியலாளர் ஒருவர் இந்த வெடிகுண்டை கண்டுபிடித்தாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இந்த பொருள் சரியாக எங்கு கண்டறியப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை.