இவ் வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9,344 கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களும், 8,637 சிறிய ஆயுதங்களின் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 2018 ஆம் ஆண்டில் வழங்கிய 600 மில்லியன் ரூபா நிதியுதவியினை அடிப்படையாக கொண்டே இக் கண்டிவெடிகளும், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2018 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க நிதியுதவியுடன் 1.86 மில்லியன் சதுர மீற்றர்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக அமெரிக்கா 2002 ஆம் ஆண்டு முதல் 9.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ள நிலையில் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு மாவட்டம் 2017ஆம் ஆண்டு கண்ணிவெடி அச்சுறுத்தல் இல்லாத மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் நிலக்கண்ணிவெடிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய எட்டு மாவட்டங்களில் அவற்றை அகற்றும் முயற்சிகளுக்கும் அமெரிக்க தொடர்ந்தும் நிதியுதவி வழங்கி வருகிறது. உள்ளூர் பங்குதாரரான சமூக ஒற்றுமைக்கான டெல்வோன் சங்கம் மற்றும் சர்வதேச பங்காளரான ஹலோ ட்ரஸ்ட், மைன்ஸ் அட்வைசரி குழு ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்க அரசாங்கம் இந்தக் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து வருகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.