பதவிய பகுதியில் இராணுவ மேஜர் ஒருவரும் இராணுவ சிப்பாய்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சியம்பலாண்டுவ பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் T56 ரக துப்பாக்கி ரவைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு துப்பாக்கி ரவைகளை விநியோகித்த சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மேஜர் தவிர்ந்த இருவரும் கோப்ரல் தரத்திலுள்ள சிப்பாய்கள் என தெரியவந்துள்ளது.
பதவிய, பராக்ரமபுர, கம்பிலிவெவ இராணுவ முகாம்களுடன் இணைந்த வகையில் சேவை புரிபவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, குறித்த மேஜர் தங்கியுள்ள வீட்டின் பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துப்பாக்கி ரவைகளுடன் 04 பெட்டிகளை காவற்துறையினர் மீட்டுள்ளனர். திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட சுஜியின் முக்கிய உதவியாளர் உள்ளிட்ட நான்கு பேர் T56 ரக துப்பாக்கி ரவைகளுடன் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9mm வகையிலான 32 ரவைகளுடன் சொகுசு ரக வானொன்றும் காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.குறித்த சந்தேகநபர்களில் லந்துவ ரொஷான் எனப்படும் முன்னாள் கடற்படை உறுப்பினரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது