கொள்கையில் மிக திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத தரப்புக்களுடன் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.வி க்னேஸ்வரன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில் வெறுமனே ஒற்றுமை என்பதற்காக சீ.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக இல்லை. என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்தேசிய கூட்ட மைப்பிலிருந்து விலகி முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்திருக்கின்றார்.
இந்த கட்சி அறிவிப்பு கூட்டம் நேற்று நல்லூர் ஆலய சுற்றாடலில் உள்ள நடராசா பரமேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. இது குறித்து கருத்துக் கேட்டபோதே செ.கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுவதுடன், அவருடைய புதிய கட்சி தமிழ்தேசம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் தீர்வினை தமிழ் மக்களு க்கு பெற்றுக்கொடுக்கவேண்டும். எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் தமிழ் மக்கள் ஒற்றுமையை விரும்புகிறார்கள். அதனை நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அந்த ஒற்றுமை என்பது கொள்கைரீதியான ஒற்றுமையாக அமையவேண்டுமே தவிர கண்ணை மூடிக் கொண்டு எல்லோரும் ஒன்றாக சேருவதல்ல.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பொறுத்தளவில் அது தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய காலம் தொடக்கம் கொள்கைரீதியான ஒன்றுமை என்பதில் உறுதியாக இருக்கின்றது. முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சி விடயத்திலும் அதுவே நடந்திருக்கின்றது.
குறிப்பாக முன்னாள் முதலமைச்சருடைய தரப்பினர் தமிழ் மக்கள் கூட்டணியில் இணைந்து கொள்வது தொடர்பாக எ ங்கள் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்கள். அப்போது நாங்கள் கூறிய விடயம் தமிழ் மக்கள் கூட்டணியில் சுரேஸ் பிறேமச்சந்திரன் இருப்பாராக இருந்தால் குறிப்பாக கொள்கைரீதியான தீர்மானம் எடுக்கும் நிலையில்,இருப்பாராக இருந்தால் அவ்வாறான கூட்டணியில் இணைந்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை. அவ்வாறு நாங்கள் கூறியதற்கு நியாயம் இருக்கிறது.
கண்ணை மூடிக்கொண்டு அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை. அல்லது ஒற்று மையை விரும்பாமல் அவ்வாறான கருத்தை நாங்கள் கூறவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடன் இணைந்து உள்ளுராட்சிசபை தேர்தலில் ஒரு ஆக்க பூர்வமான கூட்டினை உருவாக்க முயற்சித்தபோது அதனை அவர் குழப்பினார். இதனால் எதிர்காலத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைப்பதில்லை என்பது எமது கட்சியின் தீர்மானம்.
அது ஒருபக்கம் இருக்க சுரேஸ் பிறேமச்சந்திரனின் கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து இன்றளவும் விலகவில்லை. மறுபக்கம் நெடுங்கேணி பிரதேசசபை, வவுனியா நகரசபை போன்ற இடங்களில் அரச கட்சிகளுடனும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்புடனும் கூட்டிணைந்துள்ளது.
இதற்கும் மேலாக தமிழ்தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கும் சுரேஷ் பிறேமச்சந்திரனும், அவருடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் இணைந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு என்னவெல்லாம் செய்கிறதோ? அதனையே சுரேஸ் பிறேமச்சந்திரன் இன்றளவும் செய்து கொண்டிருக்கின்றார்.
எனவே சுரேஸ் பிறேமச்சந்திரனும் இருக்கும் ஒரு தரப்புடன் நாங்களும் ஒற்றுமை வேண்டும் என இணைந்து கொள்வோமானல் அது போலியான ஒற்றுமை மட்டுமே.
இது எங்களுடைய கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. இதனை நாங்கள் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சார்பில் எங்களுடன் பேச வந்தவர்களுக்கு கூறியுள்ளோம். அதற்கு அவர்கள் கூறிய பதில் சுரேஸ் பிறேமச்சந்திரன் இல்லாத கூட்டணி அமையாது என்பதே.
அதற்கு பின்னரும் நாங்கள் கூறினோம். சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுந்த வாய்ப்பை கொடுக்கலாம். ஆனால் அவர் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கும் இடத்தில் இருக்க முடியாது என அதற்கும் மறுப்பு வந்துள்ள நிலையில், துரதிஸ்டவசமாக சீ.வி.விக்னேஸ்வரனின் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை நாங்கள் இப்போது கூறியுள்ளோம் என்றார்.