நீதிபொறிமுறைக்கு அப்பால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காரணிகள் இருந்தால் தமிழ் அரசியல்வாதிகள் எமக்கு கூறலாம். அது சாத்தியமென்றால் கைதிகளை விடுதலை செய்ய முழுமையான ஆதரவை வழங்குகின்றோமென நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாரதூரமான மனித படுகொலைகள் செய்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்கள் எவ்வாறு அரசியல் கைதிகளென கூறுகின்றீர்கள். எம்மைப்பொறுத்தவரை நாட்டில் அரசியல் கைதிகளென எவரும் சிறையில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையில் உள்ளது. அவற்றுக்கு ஏற்றவாறே நாம் செயற்பட்டு வருகின்றோம். அந்தவகையில் சிறையிலுள்ள கைதிகளில் சரியான சாட்சியங்களின் அடிப்படையில் தண்டைனை வழங்கப்பட்டவர்கள் மற்றும் மரண தண்டனை கைதிகளும் உள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கு எமக்கு எந்ததொரு அதிகாரமும் இல்லை எனவும் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.