பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பிரச்சினைக்கு சரியான தீர்வு காண வேண்டுமாயின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதனை விட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் விலக வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர், அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு விடயத்தில் தீர்வு கிடைக்காவிடின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ள நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் விசேட ஊடக அறிக்கை ஒன்றை அமைச்சர் விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது வாக்காளர்கள் வழங்கிய ஜனநாயக ஆணை எனவும் கூட்டு ஒப்பந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தோ அமைச்சர் பதவியில் இருந்தோ விலக வேண்டும் என தொழிலாளர்கள் கோரவில்லை எனவும் கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும் அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றே கோரிக்கை முன்வைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனது தலைமையில் கடந்த மாதம் 23ம் திகதி தலவாக்கலையில் இடம்பெற்ற சம்பள உயர்வைக் கோரி கம்பனிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னர் முழு மலையகமெங்கும் போராட்டங்கள் இடம்பெறுவதுடன் வடக்கு, கிழக்கு மக்களும் ஆசிரியர் சமூகமும் ஆங்காங்கே போராட்டம் நடத்த மலையக இளைஞர்கள் கொழும்பில் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தும் அளவிற்கு அது வியாபித்துள்ளதாகவும் இவ்வாறான தொடர் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்த விடயத்தில் அரசாங்கம் தலையீடு செய்யாவிடின் இந்த அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மீள்பரிசீலனை செய்ய தயார் என தான் உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அறிவித்துள்ளதாகவும் ஒருபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கவில்லை எனவும் அவ்வாறு விலகினால் அது தொழிலாளர்களையும் ஒட்டுமொத்த மலையக மக்களையும் அரசியல் ரீதியாக பாதிக்கும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மலையக மக்களுக்கான உரிமை குரல் பாராளுமன்றில் எழுப்பப்பட வேண்டியது அவசியம் என்றும் அந்த விடயத்தில் அனைத்து மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.