குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் மகாதேவ ஆச்சிரம முன்னாள் தலைவருமான மறைந்த இராசநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் பூநகரியில் புதிய பேருந்து தரிப்பு நிலையமொன்று அமைத்து மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
மகாதேவ ஆச்சிரமத்தின் ஸ்தாபகத் தலைவராக இருந்த இராசநாயகம் சுகயீனம் காரணமாக கடந்த வருடம் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து அந்த ஆச்சிரமத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு ஆச்சிரமப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அவரது ஓராண்டு நினைவு தினம் அண்மையில் நடைபெற்றது.
இந் நிலையில் ஓராண்டு நினைவாக அவர் பிறந்த மண்ணாண பூநகரில் அவரது குடும்பத்தினர் பதிய பேருந்து தரிப்பிடமொன்றை அமைத்தனர். பூநகரி சுனாமியடிச் சந்தியில் அமைக்கப்பட்ட இந்த பஸ் தரிப்பிடத்தை இன்றைய வெள்ளிக்கிழமை அவரது மனைவி நாடாவெட்டித் திறந்து வைத்து பொது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான பூநகரிப் பிரதேசத்தில் குறித்த இடத்தில் பேருந்து தரிப்பு நிலையம் இல்லாததால் அப் பகுதி மக்கள் பல்வேறு கஸ்ர துன்பங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர்.
இதற்கமையவே தந்தையின் நினைவாக பிள்ளைகளின் உதவியுடன் புதிய பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.